
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், 2019 ஜனவரி முதல் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தற்போதைய சூழலில் உலகமே எதிர்கொண்டுவரும் முக்கியமான பிரச்னை சுற்றுச்சூழல் பாதிப்பு. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் பங்காற்றுகின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார்.
அதற்காக, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஒன்றை ஜெயலலிதா அமைத்திருந்தார். அந்த குழுவின் பரிந்துரைகளின் படி மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஏற்கனவே ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்துவிட்டு, வாழை இலைகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்க பரிந்துரைத்துள்ளது. மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான பால், தயிர், எண்ணெய், மருந்து பொருட்களுக்கான உறைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
எனவே வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, சேமித்து வைக்க மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
ஏற்கனவே இயற்கை எழில் சூழந்த ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊட்டியை போலவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.