
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆட்சியாளர்கள் அரசியல் பேசுவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அரசியல் பேசுவதற்கான காரணத்தை ஊட்டியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி விளக்கினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய பழனிசாமி, எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஹவாலா பார்முலாவை அறிமுகப்படுத்தியவர்தான் துரோகி. உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்றால் அது தினகரன் மட்டும்தான். எந்த உழைப்பும் கிடையாது. அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர்(சசிகலா) ஜெயலலிதாவுடன் இருந்து உதவி செய்தார். அவர் மூலம் கொல்லைப்புறமாக வந்தவர் தான் தினகரன். ஹவாலா பார்முலாவை வைத்து வெற்றி பெற்று விட்டார் தினகரன். ஆனால், நாங்கள் அத்தனை பேரும் உழைத்து முன்னுக்கு வந்து இந்த பதவியை அடைந்திருக்கிறோம்.
1974ல் அதிமுகவில் இணைந்தேன். கிளைக்கழக செயலாளராக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர் மாவட்ட கழக இணை செயலாளர், மாவட்ட செயலாளர் என படிப்படியாக வந்தேன். கொடுத்த பொறுப்பை செவ்வனே செய்து முன்னுக்கு வந்தோம். ஆனால் உங்களுக்கு அப்படிப்பட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அவர்கள்தான் துரோகிகள். கொல்லைப்புற வழியாக வந்து ஆட்சியை கவிழ்த்து கட்சியை கைப்பற்ற துடிக்கிறார் தினகரன்.
ஸ்லீப்பர் செல்கள் என்ற ஒரு விஷயத்தை தினகரன் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார். அதிமுகவில் இருக்கிற அத்தனை பேரும் ஆட்சி தொடர வேண்டும் என நினைப்பவர்கள் தான். ஆட்சி நீடிக்க வேண்டும் என நினைக்கும் பத்தர மாட்டு தங்கமாக விளங்குபவர்கள்தான் எங்களுடன் உள்ளனர். எங்களிடத்தில் இருப்பவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். உங்களைப்போல் குறுக்குவழியில் வந்தவர்கள் அல்ல. கிரிமினல்களுக்குத்தான் கிரிமினல்தனமான எண்ணங்கள் எல்லாம் வரும். கொஞ்ச நாட்கள் தான் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை தினகரனால் அனுபவிக்க முடியும். அதன்பிறகு ஆண்டவன் பார்த்துக்கொள்வான். எங்களை வீழ்த்த வேண்டும் என செயல்பட்ட திமுகவை மக்கள் வீழ்த்திவிட்டார்கள். டெபாசிட் கூட பெறமுடியவில்லை.
ஆட்சியை கலைத்துவிடுவேன் என கூறிவந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அது முடியாது என தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டார். ஆனால் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தற்போது தினகரன் அதே கூற்றை கூறிவருகிறார். மார்ச் மாதத்துக்குள் ஆட்சியை கலைத்துவிடுவதாக தினகரன் கூறிவருகிறார். நீங்கள் இருந்தால்தானே ஆட்சியை கலைக்க முடியும். மார்ச் மாதத்துக்குள் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை பார்ப்போம் என மிரட்டும் தொனியில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
நான் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறேன். விழா முடித்து சென்றால், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அரசியல் பேசுவதாக விமர்சிப்பார்கள். கட்சியை பற்றி பேசித்தான் ஆகவேண்டும். கட்சி இருந்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும். ஆட்சியில் இருந்தால்தான் நூற்றாண்டுவிழா கொண்டாட முடியும். அதனால் அரசியல் பேசித்தான் தீர வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.