
பெண் காவலரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவின் செயலுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிம்லாவில் நேற்று கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரி, தன்னை கூட்டம் நடந்த இடத்திற்குள் அனுமதிக்குமாறு கோரினார். அப்போது, அங்கிருந்த பெண் காவலர் ஒருவருடன் ஆஷாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் காவலரை, ஆஷா குமாரி கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலரும் எம்எல்ஏவை திருப்பி அறைந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏவின் இச்செயலுக்கு அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதுபோன்று செயல்படுவதை ஏற்க முடியாது. காந்தியவாதியான நாம், கோபம், வெறுப்பு, மோசமான செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. இதுபோன்று நடந்து கொள்வது காங்கிரஸின் கலாச்சாரம் அல்ல. துரதிர்ஷ்டவசமான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல், நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.