
ஒரே ஒரு தொகுதியில் பணத்தை அள்ளி இறைத்து அனைத்து ஓட்டுகளையும் கைப்பற்றியதுடன், அந்த ஒன்றை வைத்தே மாநில முதல்வராகிவிடலாம் என்று கணக்கு போட்டாராம் டிடிவி தினகரன். ஆனால் அந்தக் கனவுக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள் ஆளும் அதிமுக., பெருந்தலைகள்.
ஆர்.கே.நகரில் வென்றதும், அந்த ஒரு இடத்தை வைத்துக் கொண்டே மாநிலத்தின் முதல்வர் ஆகிவிடலாம் என்ற கனவு கண்டு கொண்டிருக்கிறார் தினகரன் என்று அதிமுகவினரே அங்கலாய்க்கிறார்கள். தனது ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்கள் மீதான தீர்ப்பு சாதகமாக வந்துவிடும் என்றும், அவர்களைத் தொடர்ந்து, தற்போது இருக்கும் அதிமுக., சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வலைவீசி தன் பக்கம் இழுத்து விடலாம் என்றும் கணக்கு போட்டு வருகிறார் தினகரன்.
அதனால், எடப்படி ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு சமாதானத் தூது சென்றதாகக் கூறப்படுகிறது. தன்னை முதல்வர் ஆக்கிவிட்டால், மற்ற எல்லா பிரச்னைகளையும் தூர எறிந்துவிட்டு, எளிதாக ஆட்சியையும் கட்சியையும் நடத்தலாம் என்று கூறியதாகவும், ஆனால் அத்தகைய பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவருமே கூறி விட்டதாகவும் கூறப்படுகிறது.
காரணம், தினகரனுடன் சமாதானமாகப் போய், ஒன்றுமில்லாமல் தொலைந்து போவதற்குப் பதில், எதிர்த்து நின்று தினகரன் குடும்பப் பின்னணியையும் கொள்ளையர்கள் என்ற இமேஜையும் மக்களிடம் பரப்பி தங்களை வளர்த்துக் கொள்வதில் கவனம் காட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவருக்கும் ஆலோசனை கூறப்பட்டுள்ளதாம். எனவேதான், அண்மைய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் எடப்பாடி சகட்டு மேனிக்கு தினகரனை கூர்மையான வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார் என்கிறார்கள்.
மாநில அளவிலும் சரி, மத்திய அளவிலும் சரி தூது அனுப்பி அது தோல்வியில் முடிந்து விட்ட நிலையில், தினகரன் தற்போது, தனது ஆதரவாளர்களுக்காக என்று ஒரு அமைப்பை அவசியம் துவக்கியே ஆக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
தனக்கு விசுவாசிகள் என்ற வகையில், அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்காக தனி பேரவையைத் தொடங்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.
அதிமுகவிலிருந்து ஈபிஎஸ்- ஓபிஎஸ்ஸால் கூண்டோடு நீக்கப்பட்டு வரும் நிர்வாகிகளுக்கு உயர் பதவி கொடுப்பதற்காக வேறு வழி தெரியாததால், தனி பேரவை அல்லது அமைப்பைத் தொடங்கி, அவர்களை சமாதானப் படுத்த முயற்சி செய்து வருகிறார் டிடிவி தினகரன்.
இதற்காக தனி அலுவலகம் ஒன்றைத் தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனி பேரவைக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக படிவங்கள் தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றதாம்.
எப்படியோ, அதிமுக., என்ற கட்சி தனக்கானது அல்ல என்ற எண்ணத்தை தினகரனின் இந்தச் செயல் வெளிப்படுத்தி விட்டதாகவே அதிமுக.,வினர் கூறுகின்றனர்.