முன்னாள் ஒரு முதல்வராக இருந்த பழனிசாமிக்கு இதுகூடவா தெரியாது..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

By Thiraviaraj RMFirst Published Jun 9, 2021, 12:27 PM IST
Highlights

முழு ஊரடங்கு பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது என மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

முழு ஊரடங்கு பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது என மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மருத்துவ பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏ.டி.ஜி.பி விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வழங்கி வரும் குருநானக் கல்லூரி நிர்வாகம் மற்றும் சிறப்பு காவல் படையின் கமாண்டோ பிரிவினருக்கு நன்றி. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த பெண் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிந்ததும் முழு விவரங்களை அறிவிப்போம்.

முழு ஊரடங்கு பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது, தொற்றின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது பெரிய அளவில் நம்பிக்கையை தருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவர்கள் பணி நியமனம் தனியாரிடமிருந்து பெறப்படுவதை மாற்றப்பட்டு கல்லூரி நிர்வாகமே முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளோம். மருத்துவர்கள் பணியிட மாற்றத்திற்கு கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. விரைவில் செவிலியர்களுக்கும் பணி மாறுதலுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

கடந்த ஆண்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டது, மதுக்கடைகள் மட்டும் திறந்திருந்தது. இந்தாண்டு அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் 1,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு 3060 ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஒன்றிய 30 ஆயிரம் மருந்து கேட்டுள்ளோம். கருப்பு பூஞ்சை குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் . மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தி மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்திகொள்ள விரும்பவில்லை. பேரிடர் காலத்தில் நோய் தொற்றை குறைக்கவே கவனம் செலுத்துகிறோம். தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசு மருந்துகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி இறப்பு சான்றிதழ் வழங்குவதில் குழப்பம் உள்ளது என்றும் கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுவதாக புகார் தெரிவித்திருந்தார். ஐ.சி.எம்.ஆர் விதிகளின் படியே கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிறது. இந்த விதிமுறைகள் முன்னாள் முதலமைச்சருக்கு தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது.

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோருக்கும் இதே நடைமுறையைதான் அரசு பின்பற்றியது. குற்றச்சாட்டை கூறுவதற்கு முன் என்ன நடந்துள்ளது என்பதை எதிர்கட்சி தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

click me!