மீண்டும் தலைமை செயலகமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை..? மாற்று வழி தேடும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Jun 9, 2021, 12:02 PM IST
Highlights

கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் பட்சத்தில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இங்கு மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை ரூ.650 கோடி செலவில் கட்டி முடித்தார். இந்த கட்டடம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் 2 முறை சட்டசபை கூட்டத்தொடர்களும் நடத்தப்பட்டன. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் புதிய தலைமை செயலக கட்டிடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றினார். சட்டமன்றம் மீண்டும் ஜெயின் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கோட்டையில்தான் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அலையின் போது சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

தொடர்ந்து இப்போது வரை கலைவாணர் அரங்கில்தான் சட்டமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.ஏற்கனவே அந்த வளாகத்தில் பல்வேறு வசதிகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அங்கு கொண்டு வரப்பட உள்ளதால் அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டிக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாகவும், சட்டசபை அரங்கமாகவும் மாற்றப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அண்ணா சாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவமனைக்காக முழு கட்டமைப்பு இல்லை. இது ஒரு அலுவலகத்துக்கான கட்டமைப்பு. மற்ற அரசு மருத்துவமனைகளை விட மிகவும் குறைவான நோயாளிகளுக்கே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் பராமரிப்பு செலவுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் பட்சத்தில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இங்கு மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுபற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த வி‌ஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்தே மாற்றத்திற்கான முடிவு வெளியாகும்.

click me!