
பக்கோடா விற்பது தவறல்ல; பக்கோடா விற்பது போலவே காளான், அலங்கார மீன்கள் உற்பத்தி செய்து விற்கலாம் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு வலைத்தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது வேலையின்மை குறித்து பேசுகிறார்கள். இந்த தொலைக்காட்சி நிலையத்துக்கு வெளியே நின்று இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால்கூட நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என்று
கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு, இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல, பல்வேறு மாணவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனத்தை கூறியிருந்தது.
இது தொடர்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக அலுவலகம் முன் படித்த இளைஞர்கள், பக்கோடா விற்பனை செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி, இரு தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வருகை தந்தார். பாஜக பேரணி நடக்க இருந்த பேலஸ் சாலை அருகே இளைஞர்கள் பலர் பட்டமளிப்பு ஆடையுடன், பக்கோடா விற்பனை செய்து, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பட்டதாரி உடையில், அவர்கள் சாலைகளில் மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா என்று கூவிக்கூவி பக்கோடா விற்றனர். பாரதிய ஜனதா பொதுக் கூட்டம் நடந்த அரண்மனை மைதானத்தின் அருகேயே, மாணவர்கள், பக்கோடா விற்பனை செய்தனர். அந்த போலீசார், அந்த இளைஞர்களை கைது செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு குறித்து, அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தாலும், ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, பக்கோடா விற்பது தவறல்ல. சுய வேலை வாய்ப்பு என்பது சிறந்த விஷயம். பக்கோடா விற்பது போலவே காளான் மற்றும் அலங்கார மீன்களை உற்பத்தி செய்து விற்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு வலைதளவாசிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.