
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, வாழ்த்து கூறி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
அண்மையில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கார் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இளையராஜாவுக்கு பூங்கொத்து வழங்கி, பத்ம விபூஷன் விருதுக்காக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில், இசையமைப்பாளர் இளையராஜாவை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார்.
இளையராஜாவை பார்த்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வாழ்த்துக்கள் கூறியதுடன், அவரது காலில் விழுந்தும் ஆசிர்வாதம் பெற்றார். இதன் பின்னர் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களைக் கலையின் மூலம் ஒன்றிணைக்கும் நோக்கில், தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக கார்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியத்தை வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இது குறித்து இளையராஜாவிடம் ஆலோசனை பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைட்ச செல்வனும், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.