சம்மன் அனுப்பியும் கொஞ்சம் கூட மதிக்கல.. விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர்.

By Ezhilarasan BabuFirst Published May 31, 2021, 1:22 PM IST
Highlights

முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் அந்த சம்மனை புறக்கணித்து முதல்வர் மற்றும் தாளாளர் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துள்ளனர்.  

மாவட்ட குழந்தைகள் நலக் குழு சார்பில் பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் இன்று சம்மனை புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துள்ளனர். பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கடந்த 24 ஆம் தேதி அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பாக அசோக்நகர் காவல் துறையினர் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரிடம் 2 நாட்களாக சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி மாணவிகள், பெற்றோர்களின் புகார்களை அலட்சியப்படுத்தியது ஏன் ? புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் காவல்துறை சார்பில் முன்வைக்கப்பட்டது. இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் அந்த சம்மனை புறக்கணித்து முதல்வர் மற்றும் தாளாளர் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துள்ளனர். 

ஏற்கனவே இரு மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்திருந்த நிலையில், அவர் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று மேலும் 3 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில் தனித்தனி வழக்குகளாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை வரும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

click me!