பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. திமுக அரசிடம் அறிக்கை கேளுங்க.. தமிழக ஆளுநருக்கு கடிதம்.. பரபரக்கும் சு.சாமி!

By Asianet TamilFirst Published May 28, 2021, 9:14 PM IST
Highlights

பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புக்கவனம் எடுத்து, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்வபம் அம்பலமானது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீதும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் சாதிய ரீதியாக அணுகப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
இந்நிலையில், இப்பள்ளி விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி களத்தில் இறங்கியுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும் உள்நோக்கத்தோடு அரசு செயல்படுவது தெரியவந்தால் தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று சுப்ரமணிய சுவாமி பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவை வெளியிட்ட சுப்ரமணியசாமி, “தமிழகத்திலுள்ள ஞானி மற்றும் தியாகிகளான பிராமணர்கள் மத்தியில், எழுந்துள்ள அச்ச உணர்வு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். நாஜி படைகள் ஜெர்மனியில் யூதர்களை குறி வைத்து, தாக்குதல் நடத்திய ஆரம்ப கால கட்டத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது” என்று திமுக அரசு மீது கடும் விமர்சனத்தை சுப்ரமணிய சுவாமி வைத்திருந்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “திமுக ஆட்சிக்கு வந்த நாட்களிலேயே குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அர்ச்சகர்கள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புக்கவனம் எடுத்து, இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பி, அறிக்கை தயாரித்து வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

click me!