ஜூன் முதல் 13 மளிகை பொருட்கள் தொகுப்பு... தமிழக அரசு அதிரடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 28, 2021, 07:44 PM IST
ஜூன் முதல் 13 மளிகை பொருட்கள் தொகுப்பு... தமிழக அரசு அதிரடி...!

சுருக்கம்

முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா தொற்று பரவல் சற்றே குறைய தொடங்கிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.   

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா தொற்று பரவல் சற்றே குறைய தொடங்கிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 

கடந்த முறையைப் போல் அல்லாமல் இந்த முறை மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சில மாற்றங்களை செய்துள்ளார். நியாய விலைக்கடை மூலமாக கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது மீண்டும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு,  13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் கிடைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் பெண்மணி.. யார் இந்த சுனேத்ரா பவார்..?