நீங்க மட்டும் உதவாவிட்டால் நிலைமை அவ்வளவு தான்... மத்திய, மாநில அரசுகளிடம் மன்றாடும் கமல்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 28, 2021, 8:48 PM IST
Highlights

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவணரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்த நிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொரோனா தொற்று பரவியது. முதல் அலை ஊரடங்கில் தமிழகத்தின் பாதி தொழில்கள் காணாமல் போயின. மீதி தொழில்கள் குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக்கொண்டிருந்தன.

இப்போதோ இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே உடனடி வழி என்றாகிவிட்டது. இந்த ஊரடங்கு சிறு குறு நடுத்தர தொழில்கள் மீது விழுந்த சம்மட்டி அடியாகி விட்டது.தமிழகத்தின் தொழில்துறையைப் பாதுகாக்க நிலையான மின்சார கட்டண தொகையினை இந்த ஊரடங்கு காலத்தில் ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களை அழைத்துவர பேருந்து / வேன் வசதி செய்வது எல்லாராலும் முடியாத காரியம் இதற்கான மாற்று வழிகளுக்கு அரசே உதவ வேண்டும்.

சோப் மாற்றும் சானிடைசர் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடுப்பவர்களை அத்தியாவசியப் பொருட்கள் தயாரிப்பவர்களாக அங்கீகரிக்க வேண்டும். ஆக்ஸிஜன் போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் வட்டி விகிதத்தில் மானியம் வழங்க வேண்டும். சர்பாசி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தொழில்துறையின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த இக்கட்டான நேரத்திலாவது இந்தச் சட்டத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வாராக்கடன் வசூல் விதிமுறைகளிலிருந்து சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் விலக்கு அளிப்பதுடன் தொழில் நிறுனவங்களுக்கு அனைத்துவகை கடன்களின் ஈ.எம்.ஐ. தவணைகளைச் செலுத்தும் சுமையிலிருந்தும் ஓராண்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். வட்டித் தொகை செலுத்தாததால் திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலத்தில் கடன் தொகைகளை செலுத்துமாறு அவசரப்படுத்தக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.


மத்திய மாநில அரசுகளிடமிருந்து உதவி கிடைக்காவிட்டால் தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தொழில் அமைப்புகள் வேதனையுடன் தெரிவிக்கின்றன. முதலீடுகள் கரைந்துவிட்ட இன்றைய சூழலில் தொழில்கள் மேற்கொண்டு நடைபெற நிதி உதவி அவசியம் தேவை என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். சிறு குறு நடுத்தர தொழில்களைக் காக்க விரைவான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தவறினால், கொரோனா துயரத்துடன் வேலைவாய்ப்பின்மையால் பசி பட்டினி கொடுமைகளும் இணைந்துவிடும் அபாயம் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!