பெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.. அசைக்க முடியாத விசுவாசம்.. வெற்றிவேலுக்கு டிடிவி.தினகரன் புகழாஞ்சலி..!

By vinoth kumarFirst Published Oct 16, 2020, 4:45 PM IST
Highlights

துணிச்சலின் இருப்பிடமாகவும், தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த அமமுகவின் பொருளாளரும், என் அருமை நண்பருமான வெற்றிவேல் நம்மை எல்லாம் கலங்கவைத்து, சென்றுவிட்ட பெருந்துயரத்தோடு உங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன். நண்பர் வெற்றி, இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது.

உணர்வு மாறாமல், லட்சியப்பாதையில் இன்னும் பிடிப்போடும், வேகத்தோடும் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுவதே வெற்றிவேலுக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- துணிச்சலின் இருப்பிடமாகவும், தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த அமமுகவின் பொருளாளரும், என் அருமை நண்பருமான வெற்றிவேல் நம்மை எல்லாம் கலங்கவைத்து, சென்றுவிட்ட பெருந்துயரத்தோடு உங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன். நண்பர் வெற்றி, இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன் ஜி.கே.மூப்பனாரால் அறிமுகமான வெற்றிவேலுக்கும் எனக்குமான நட்பு, நம்மோடு அவர் இணைந்து பயணிக்கத் தொடங்கிய பிறகு இன்னும் நெருக்கமானது. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வெற்றிவேலை அறிமுகப்படுத்தி வைத்த அந்த மணித்துளிகள் இப்போதும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன. அதன்பின்னர் ஜெயலலிதாவின் பேரன்புக்குப் பாத்திரமானவராக வெற்றி திகழ்ந்தார். ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஏதுவாக 2015-ல் தமது எம்எல்ஏ பதவியைத் துறந்தார். அந்தத் தொகுதியில் ஜெயலலிதா வாகை சூடுவதற்கு உழைத்த தொண்டர் படையின் தளகர்த்தராக நின்று எந்த மனத்தயக்கமும் இல்லாமல் வெற்றிவேல் பணியாற்றினார். அதுதான் அவரின் விசுவாசத்தின் போற்றுதலுக்குரிய குணம்.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, தலைமைக்காக எத்தனை துயர் வந்தாலும் இம்மியளவும் பிசகாமல் விசுவாசத்தின் இமயமாக நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்வதே ஒரு லட்சியவாதியின் அடையாளம். அப்படியோர் அசைக்கமுடியாத அடையாளமாக நம் கண்ணெதிரே திகழ்ந்தவர் வெற்றிவேல். ஆமாம்… வெற்றிவேல் என்றால் விசுவாசம். விசுவாசம் என்றால் வெற்றிவேல். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதே மாறாத அன்பையும் அளவிட முடியாத பாசத்தையும் சசிகலா மீதும், என் மீதும் காட்டினார்.

அதுவரை தமிழக வரலாறு பார்த்திராத அளவுக்கு அதிகாரத்தின் அத்தனை முனைகளின் வழியாகவும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் தாண்டி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு முழுமுதற்காரணமே என் அருமை நண்பர் வெற்றிதான்! அச்சுறுத்தல்கள் நிறைந்த அந்த இடைத்தேர்தல் களத்தில் சூறாவளியாக சுற்றிச் சுழன்று வெற்றி ஆற்றிய பணிகளை என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. அதன்பிறகு தாம் மறையும் வரை என்னுடைய பிரதிநிதியாக நின்று ஆர்.கே.நகரில் மக்கள் பணிகளை மேற்கொண்டவரும் அவர்தான்.

வெற்றிவேல் நினைத்திருந்தால் 'அற்ற குளத்து அறுநீர்ப்பறவை போல' ஆதாயம் இருக்குமிடம் தேடி பறந்திருக்கலாம். ஆனால், 'தனிப்பட்ட பலன்களைவிட, இயக்கமே பெரிது' என்றெண்ணி இறுதிவரை ஏற்றுக்கொண்ட தலைமைக்குப் பக்கபலமாக வேலாகவும், வாளாகவும் களத்தில் நின்றார். சூதுமதியாளர்களின் துரோகத்தால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோனபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், முன்பைவிட இன்னும் வேகமாக இயக்கப் பணியாற்றியவர். எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் 'நான் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பேன்' என்று நெஞ்சம் நிமிர்த்தி சொன்ன பெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வெற்றிவேல்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் மீது சுமத்திய அபாண்ட பழி துடைத்தெறியப்பட்டதில் வெற்றிவேலின் பங்கு முக்கியமானது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சிகளை அவர் வெளியிட்டதில் எனக்கே கூட உடன்பாடு இல்லை. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டபோது, 'தோழியாக, தாயாக ஜெயலலிதாவைப் பார்த்துக்கொண்ட சசிகலா மீது மனசாட்சியை விற்றுத் தின்றவர்கள் திட்டமிட்டுப் பரப்பிய அவதூறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; அதனால்தான் வீடியோவை வெளியிட்டேன்' என்று பதில் சொன்னார்.

அந்த உண்மை வெளியானதும் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்த பிறகே, வெற்றிவேல் எனும் அப்பழுக்கில்லாத தளபதியின் ஆதங்கத்தில் இருந்த நியாயம் புரிந்தது. இப்படி இயக்கத்திற்காக, தலைமைக்காக சுயமாக முடிவெடுத்து சமரசங்கள் ஏதுமில்லாமல் செயல்படும் தீரமும், நெஞ்சுரமும் கொண்டவர் வெற்றி. எதிர்காலத்தில் எதிரிகளும் துரோகிகளும் ஏற்படுத்துகிற இத்தகைய தடைகளை எல்லாம் உடைத்து தூள், தூளாக்கி வெற்றி பெறும் சக்தியை வெற்றி போன்றவர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். அந்த உணர்வு மாறாமல், லட்சியப்பாதையில் இன்னும் பிடிப்போடும், வேகத்தோடும் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுவதே வெற்றிவேலுக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

வெற்றிவேல் போன்றவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இயக்கமே அமமுக. நம்மை இயக்கும் சக்தியாக திகழும் நம் அன்புத்தாயின் பெயரைக்கொண்டு, அவரின் கம்பீர உருவத்தை கொடியிலும் இதயத்திலும் தாங்கி நாம் லட்சியப் பயணத்தைத் தொடங்கினோம். எதற்கும் அஞ்சாத லட்சோப லட்சம் வெற்றிவேல்கள் கட்டி எழுப்பிய பேரியக்கம் இது. வெற்றிவேல் போன்ற தன்னலமில்லாத தளபதிகளால் போற்றி பாதுகாக்கப்படுகிற இயக்கம் இது. அதனால் நாம் நிச்சயம் வெற்றிக்கோட்டையை எட்டிப்பிடிப்போம்! ஏனெனில் நம்முடைய வெற்றிவேல் போன்றோரின் தியாகமும், உழைப்பும் ஒரு நாளும் வீண் போகாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 

click me!