இந்த வருடமும் அவுட்.. ஜூலை, ஆகஸ்டில் கொரோனா 3வது அலை.. பீதியில் மகாராஷ்டிரா.

By Ezhilarasan BabuFirst Published May 1, 2021, 2:08 PM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலை ஒட்டுமொத்த தேசத்தையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்பிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.  

கொரோனா இரண்டாவது அலை ஒட்டுமொத்த தேசத்தையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்பிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். மாநிலம் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டுவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  ராஜேஷ் தூபே அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

 கொரோனா இரண்டாவது அலை ஒட்டுமொத்த இந்தியாவையும் கபளீகரம் செய்துள்ளது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 3.50 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில்  4 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 3 ஆயிரத்து 573 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் கொரோனா தீவிரமாக உள்ளது. அதிக நெரிசல் மிக்க மாநிலமான மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் துபே ஆகியோர் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது  ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மகாரஷ்டிராவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே தேவையான அளவு தடுப்பு ஊசி மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே, மருத்துவமனைகள் வளாகத்தில் ஆக்சிஜன், ஜெனரேட்டர் ஆலைகளை அமைக்கவும்,   ஆக்சிஜன் செறிவுகளை ஏற்பாடு செய்யவும்,  சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ இயந்திரங்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

தற்போது அம்மாநிலத்தில் 10,000 முதல் 15,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது, இந்நிலையில் மூன்றாவது அலையின் போது தட்டுப்பாடுகள்  இருப்பின் அது மோசமான விலைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தில் 66 ஆயிரத்து 159 பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 771 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் துபே, ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் 3வது அலை மாநிலத்தை தாக்கக்கூடும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து அதை எதிர்கொள்வதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளையும் செய்ய அரசு  தீவிரம் காட்டி வருகிறது, இரண்டாவது அலையே இன்னும் ஓயாத நிலையில், மூன்றாவது அலையை மாநிலம் எதிர் கொள்ள வேண்டும் என்பது மாநில நிர்வாகத்திற்கு மிகப் பெரிய சவால் எனக் கூறியுள்ளார்.

 

click me!