
புதுச்சேரிக்கு வருகைதரும் அமித்ஷா 390 காவலர்களுக்கான பணி ஆணையினை வழங்கவுள்ளதாக புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் வருகை புதுவை பாஜகவுக்கு உத்வேகத்தை தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் 70 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் மாநில அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வரவுள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்க புதுச்சேரி மாநில அரசு மற்றும் பாஜகவினர் தயாராகி வருகின்றனர். 24ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா புதுவை விமான நிலையம் வந்திறங்குகிறார். அவரை அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்க உள்ளனர்.
அங்கிருந்து புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா மற்றும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து கம்பன் கலை அரங்கத்தில் நடைபெறும் விழாவில் அமித்ஷா பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து பாஜக அலுவலகம் செல்லும் அவர் அங்கு கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். நிகழ்ச்சிக்குப் பின்னர் புதுவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்கிறார். அரவிந்தர் ஆசிரமம், பாரதியார் நினைவு இல்லம் உள்ளிட்டவைகளையும் அவர் பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறது. இந்நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அவர் விவரித்தார். அமித்ஷா புதுச்சேரிக்கு வந்தவுடன் புதுச்சேரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 390 காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்க உள்ளார் என மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் அமித்ஷா வருகை பாஜகவுக்கு உத்வேகத்தைத் தரும் என கூறினார். அமைச்ச வருகையின் போது கருப்புக்கொடி காட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருக்கின்றனவே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், வாக்கு வங்கி இல்லாத இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் ஒரு ஏமாற்று வேலை என பதிலளித்தார்.
அதேபோல் 20 கோடி ரூபாயில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குமரகுரு பள்ளத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டவும், அதேபோல் 30 கோடி செலவில் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போடும் பணியை தொடங்கி வைக்க உள்ளார் எனவும் மாநில அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.