
தமிழக ஆளுநர் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அது தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த மசோதா மீது விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். இதனையடுத்து மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில் 200 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதை அடுத்து தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புறக்கணித்தன. அதை தொடர்ந்து மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுநர் ரவியின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கருப்பு கொடி வீசப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தமிழக காவல்துறை மறுத்தது.
ஆளுநர் வாகனத்தின் மீது கருப்பு கொடி வீசப்படவில்லையென்றும் கான்வாய் முழுவதுமாக சென்ற பிறகு போலீசார் வாகனத்தின் மீது கருப்பு கொடி வீசப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். தருமபுரியில் திரவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொது கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது பேசிய அவர், பல ரூபத்தில் மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா வைரஸை விட மிக மோசமான, கொடிய நோய் தான் நீட் தேர்வும், புதிய கல்விக்கொள்கையும்.
அந்த கொடிய நோயான நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கை என்கிற குலதர்ம கல்வி திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் போராடுவார். சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்கிற நிலையை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒழித்து கட்டிய பெருமை திராவிட இயக்கத்தையே சேரும். அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு மாவட்டங்களிலும் அனைவரும் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகள் பெருமையும், திராவிட மாடல் ஆட்சியையே சேரும். அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் திரவிட மாடல் ஆட்சி. குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை எதிர்த்த மோடி, பிரதமராக வந்த போது எதையெல்லம் எதிர்த்தாரோ அதையெல்லாம் செய்து வருகிறார். பிரதமர் மோடியின் பிடி ஆர்.எஸ்.எஸ் கையில் உள்ளது. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகாவுக்கு ஏஜெண்டாக செயல்படுபவர் தான் தமிழக ஆளுநர் என்று தெரிவித்தார்.