
"இருக்கிற பொறுப்புக்கே வேலையில்லை, இதுல மாநில பொறுப்பு வேற" என அதிமுக முன்னாள் அமைச்சர் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலைகள் ஏற்படுத்தியது.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வந்தாலும் ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் அது எதிர்கொண்ட தேர்தல்கள் அனைத்திலும் படுதோல்வியே கிடைத்துள்ளது. மறுபுறம் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் சசிகலா தீவிரம் காட்டி வருகிறார். இது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை தீவிரமாக எதிர்ப்பவர்கள் பலர் இருந்தாலும் அதில் முதன்மையானவராக இருந்து வருகிறார் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி சண்முகம். இவர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.
சசிகலா விவகாரத்தில் எடப்பாடி சற்று நிதானத்தை கையாண்டாலும் சசிகலாவின் பெயரைக் கேட்டாலே கொந்தளிப்பாகிவிடுகிறார் சிவி சண்முகம். கருவாடு மீன் ஆகிவிட முடியுமா என காளிமுத்து சொன்னார், ஆனால் கருவாடு கூட மீன் ஆகிவிடலாம், சசிகலா ஒருநாளும் அதிமுகவிற்குள் வரமுடியாது என சவால் விடுத்தவர்தான் சி.வி சண்முகம். ஸ்டாலின் அல்ல சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் கூட அதிமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது என்றவரும் சண்முகம் தான். அம்மா வீட்டில் வேலைக்காரியாக இருந்தவர்கள் எல்லாம் அதிமுகவை கைப்பற்ற ஆசைப்படலாமா என ச சிகலாவை தாறு மாறாக விமர்சித்தார். அதேநேரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திமுகவை எதிர்த்து அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பேசுபொருளாக மாறிய. அதில் அவரை கைது செய்த போலீஸார் அன்று மாலையே விடுதலை செய்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஊழல் புகாரில் சிக்கிய மாஜி அமைச்சர்கள் மீதான ரெய்டு ஈடுபடலாம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்தவகையில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற கலக்கத்தில் அதிமுக மாஜி அமைச்சர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சி.வி சண்முகம் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரபரக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி சிவி சண்முகம் கைது செய்யப்பட்டபோகிறார் என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன் அடிக்கடி திரண்டு வருவதும் பின்னர் கலைந்து செல்வதும் வாடிக்கையாக வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சி.வி சண்முகம் என்னை கைது செய்யப்போவதாக தகவல் பரப்பி வருகின்றனர், வீட்டில்தான் இருப்பேன் எப்போது வேண்டுமானாலும் என்னை கைது செய்ய வரலாம் என அவர் போலீசுக்கே சவால் விட்டு பேசியிருக்கிறார்.
எதையும் வெளிப்படையாக பட்டதை பேசக்கூடியவர் சிவி. சண்முகம் என்ற கருத்து கட்சியில் இருந்து வருகிறது. பல நேரங்களில் அவர் பேசுகின்ற கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகவும் வெடித்து வருகிறது. சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் பாஷாவை பொதுக்குழுவில் அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்த நிலையில் எஸ். பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் வரிசையில் சிவி சண்முகம் முக்கிய நபராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தற்போது மாவட்ட செயலாளராக உள்ளீர்கள், மாநில பொறுப்பு கேட்கப்படுவதாக தகவல் வருகின்றதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், " இருக்கிற பொறுப்புக்கு வேலை இல்லை இதுல மாநில பொறுப்பு வேற " என சிவி சண்முகம் தலையிலடித்துக் கொண்டார். இதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.