
ஜெயலலிதாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட எனக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க அமைச்சர் ஜெயகுமார் யார்? என கோபமாக கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், இந்த திமிர் பேச்செல்லாம் இனி கூடாது என எச்சரித்தார்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்றுப் பேசினார்.
வர்தா புயல், ஜல்லிக்கட்டு, ஆந்திராவில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தது நான் தான்.இதற்கு காரணம் ஜெயலலிதாவிடம் நான் கற்ற பாடம்தான் என தெரிவித்தார்.
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., '2 அணிகளிலும் பேச்சுவார்த்தை குழுவை கலைத்து விட வேண்டும்' என்றார். எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. ராஜன் செல்லப்பா மதுரை மேயராகி சென்னையில் பொழுதை போக்கியவர் தான் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
எனக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுத் தருவதாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார். நான் மறைந்த ஜெயலலிதாவால் 2 முறை முதலமைச்சராக நியமிக்கப்பட்டவன். எனக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுத் தருவதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், இது போன் திமிர் பேச்செல்லாம் இனி பேசக்கூடாது என எச்சரித்தார்.