
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு, முன்பு, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, அவர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சசிகலாவுக்கு பிறகு கட்சி நிர்வாகத்தை கவனித்து வந்த தினகரன், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி முதல்வராக இருந்தாலும், சேகர் ரெட்டி டைரி உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக, பிரதமர் மோடியே, தற்போது அவரது ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமையாக இருந்து வருவதாகவே தெரிகிறது.
அமைச்சர்கள் யாரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து சொல்ல கூடாது என்று அவர் வெளிப்படையாகவே கூறி விட்டார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் கோட்டையில் அமைச்சர்களுக்கே வகுப்பெடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தின் மீதான, மத்திய அரசின் கோபத்தை அறிந்த எடப்பாடி, அவர்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டதாக அடிக்கடி சத்தியம் செய்து வருகிறார்.
இருந்தாலும், சசிகலா குடும்பத்தின் மீதுள்ள கோபம் பிரதமர் மோடிக்கு இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா குடும்பத்தின் முக்கிய உறவினர் ஒருவரை அண்மையில் சந்தித்த கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், நிலைமையை அவரிடம் தெளிவாக விளக்கி சொல்லி இருக்கிறார்.
மோடியை பொறுத்தவரை, உங்கள் குடும்பத்தை அவர் கடுமையாக வெறுக்கிறார். அதனால், நீங்களாக அரசியலை விட்டு விலகி கொள்ளுங்கள். சசிகலாவை பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.
அப்படி செய்தால், சீராய்வு மனுவில் சில சாதகமான முடிவு கிடைக்கும். பெங்களூரு சிறையில் சிறந்து புழல் சிறைக்கும் மாறி கொள்ளலாம் என்று செல்லமாக மிரட்டும் பாணியில் கூறி இருக்கிறார்.
அதை கவனமாக கேட்டுக்கொண்ட சசிகலா உறவினர், அதை சசிகலாவிடம் கூறுவதாக சொல்லி இருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கட்சியையும் ஆட்சியையும் பின்னால் இருந்து இயக்கிய சசிகலா குடும்பம், தற்போது, ஆட்சி அதிகாரமா? விடுதலையா? என்று சிந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறது.