
தேர்தல் ஆணையம் எதிர்பார்த்தப்படியே சூடாக பதில் அனுப்ப தங்கள் சோகத்தை மறைத்து சந்தோஷமாக இருப்பதாக வெளியில் காட்டி கொண்டாலும் டிடிவி தரப்பு கடும் பதற்றத்தில் உள்ளனர்.
இதை அவர்கள் அளிக்கும் பேட்டியிலேயே காண முடிகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியே அதே டீம் இன்றும் டிடிவி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் நிலைமை அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதைத்தான் நடைமுறை காண்பிக்கிறது. அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் 5 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும். கட்சி உறுப்பினரால் தேர்வு செய்யப்பட வேண்டும் (அல்லது) அன்ன போஸ்ட்டாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
பொதுச்செயலாளர் இல்லாத நேரத்தில் அவைத்தலைவர் பொருளாளர் பொறுப்பை கவனித்து இடைக்கால ஏற்பாடாக பொறுப்பு செயலாளராக ஒருவரை அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் காலம் வரை நியமிக்கலாம்.
ஆனால் இதை சாதகமாக கொண்டு பொதுச்செயலாளரான சசிகலா உடனடியாக எடுத்த நடவடிக்கைகள் தான் அவரை எதிர்த்து இன்று பலரையும் களம் காண வைத்துள்ளது. ஆகவே அவரது நியமனம் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் சீரியசாகத்தான் பார்க்கும்.
அப்படி பார்க்கும் போது அதன் பாதிப்புகள் கட்சியையே அசைத்து பார்க்கும். இதை அறியாத நவநீத கிருஷ்ணன் போன்றவர்கள் பொதுச்செயலாளர் தேர்வு எனபது கட்சியின் உள் விவகாரம் அதை கேள்வி கேட்க தேர்தல் ஆணையத்துக்கும் , கோர்ட்டுக்கும் அதிகாரம் இல்லை என்று அதிமுக மேடையில் பேசும் கட்சியின் பேச்சாளர் போல் முழங்குகிறார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் பொதுச்செயலாளர் இப்படித்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எழுதியுள்ளார்கள். ஆனால் இப்படி தேர்வு செய்யப்பட கூடாது என்று சொல்லவில்லையே என்று புது கதை விடுகிறார்.
ஆனால் யதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது என்பதைத்தான் தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு அனுப்பிய பதில் காண்பிக்கிறது. இதன் பின்னர் சசிகலா நியமனத்துக்கும் பிரச்சனை வரலாம். இதனால் ஓபிஎஸ் அணியினர் சந்தோஷமடைந்துள்ளனர்.
மூன்றே மூன்று பேர் திரும்ப வந்ததற்கு பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள் டிடிவி அணியினர். நேற்று மாலை 1500 க்கும் மேற்பட்டோர் சாதாரணமாக ஓபிஎஸ் அணியில் இணைகின்றனர். இந்த சம்பபவங்களால் சந்தோஷத்தில் ஓபிஎஸ்சும். துக்கத்தை மறைத்து புன்னகையுடன் டிடிவி தினகரனும் காட்சி தருகின்றனர்.