நண்பன் எனக்கூறி அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் திமுக..! இருப்பதை பறிப்போம் என்பதுதான் திராவிட மாடலா- ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Nov 1, 2022, 8:51 AM IST
Highlights

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-07-2022 முதல் வழங்க வேண்டும் என தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை சரியான முறையில் வழங்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தும் கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்காததோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியைக்கூட அவர்களுக்கு வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறையும் போது விற்பனை குறைவு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, விலைவாசி உயர்வை ஈடுகட்ட அளிக்கப்படுவதே அகவிலைப்படி. இந்த அகவிலைப்படி உயர்வைகூட அதற்குரிய தேதியில் வழங்காமல் பின் தேதியிட்டு வழங்குவது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும்.

பத்திரிக்கையாளரை குரங்குடன் ஒப்பிட்ட சம்பவம்.!மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது-அண்ணாமலை திட்டவட்டம்

ஊழியர்களை வஞ்சிக்கும் திமுக

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியிலிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 14 விழுக்காடு உயர்த்தி, அதாவது 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தி அதனை 01-07-2021- முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. இதனைப் பின்பற்றி, மாநில அரசு ஊழியர்களுக்கும் மேற்படி 14 சதவீத அகவிலைப்படி உயர்வு 01-07-2021 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

இது தான் திராவிட மாடலா..?

ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல், 01-07-2021-க்கு பதிலாக 01-01-2022 முதல் மேற்படி 14 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கியது. அதாவது, ஆறு மாத காலத்திற்கு 14 சதவீத அகவிலைப்படி வழங்கப்படவில்லை. இதேபோன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 3 விழுக்காடு உயர்த்தி, அதாவது 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி அதனை 01-01-2022 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. இதனையொட்டி, மாநில அரசு ஊழியர்களுக்கும் 34 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு 01-01-2022 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேற்படி உயர்வு 01-07-2022 முதல்தான் வழங்கப்பட்டது. அதாவது, ஆறு மாத காலத்திற்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படவில்லை. ஒரு வேளை 'இருப்பதை பறிப்போம்' என்பதுதான் 'திராவிட மாடல்' போலும்.

சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

தொழிலாளர்கள் ஏமாற்றம்

தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், வழக்கம்போல் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது. ஏற்கெனவே, இரண்டு முறை அகவிலைப்படியை ஆறு மாத காலத்திற்கு தள்ளி வைத்துள்ளதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்த முறையாவது 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-07-2022 முதல் ரொக்கமாக தி.மு.க. அரசு வழங்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தொடர்ந்து காலந்தாழ்த்தி வழங்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

காலம் தாழ்த்த கூடாது

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலந்தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஏக்கருக்கு ரூ.250 மட்டுமே இழப்பீடு..! திமுக ஆட்சியில் நடுத்தெருவில் நிற்கும் விவசாயிகள்..!- இபிஎஸ் ஆவேசம்

click me!