ஜெயலலிதாவை தெய்வம் என்று கூறிவரும் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா வாழ்ந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கூட போடவில்லை.
எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கினை விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தியது. இதில் ஓபிஎஸ் அணி சார்பாக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மற்றும் அமமுக பொருளாளர் எஸ்.கே. செல்வம் ஆகியோர் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க;- கோடநாடு குற்றவாளிகளை காப்பாற்றும் திமுக? அறிக்கை விட்டு ஆளுங்கட்சியை உசுப்பேற்றி அதிமுகவை அலறவிடும் டிடிவி.!
இதனிடையே கொடநாடு குற்றவாளி பிடித்து விட்டதாக கருப்பு துணி அணிந்த நபரை அழைத்து வந்து நூதன முறையில் நாடகம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புகழேந்தி பேசுகையில்;- கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறியது. ஆனால் அந்த சமயத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த இடத்திற்கு சென்று பார்க்கவில்லை. மேலும் ஜெயலலிதாவை தெய்வம் என்று கூறிவரும் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா வாழ்ந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கூட போடவில்லை.
இந்நிலையில் தான் இந்த கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறி 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அப்போதைய ஆளுநரை சந்தித்து கொடநாடு வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். அங்கு சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கொலையின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக கூறியிருந்தார். இதில் நடவடிக்கை இல்லை என்றால் குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிப்போம் என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் மீது வழக்கு..? இறங்கி அடிக்க தயாராகும் எடப்பாடி- என்ன காரணம் தெரியுமா.?
ஆனால் தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை கொலை கொள்ளைக்காரர்கள் சுதந்திரமாக நடமாட விட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் அணி மற்றும் அதிமுக சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்று இபிஎஸ் முழக்கமிட்டு வரும் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிர்ப்பை காட்டியது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.