உங்களால்தான் ஓ.பி.எஸ் என்னை தவறாக நினைக்கிறார்... ராஜேந்திர பாலாஜியிடம் எகிறிய எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Sep 9, 2020, 2:12 PM IST
Highlights

நானே இங்க ஏகப்பட்ட பிரச்னைல இருக்கேன். இதுல நீங்க வேற பிரச்னையை உண்டாக்கலாமா? போங்க, போயி  வேலயப்பாருங்க!” என்று சற்று காட்டமாகவே பேசி அனுப்பி விட்டாராம்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடியாக மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது அ.தி.மு.க வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, ‘அடுத்த மாவட்டச் செயலர் யார்?’என்ற கேள்வியும் அ.தி.மு.க. வினரிடையே எழுந்தது.

அமைச்சராகவும், விருதுநகர் மாவட்டபொறுப்பாளராகவும் இருந்தாலும், தனக்கு எதிராக சாத்தூர் எம்.எல்.ஏ.ராஜவர்மன் முதல்வர் விசிட்டின் போது தனியாக கோஷ்டிகளைத் திரட்டி வரவேற்பளித்தது, அதில் ராஜேந்திரபாலாஜியால் பதவி பெற்ற பல நிர்வாகிகளும் கலந்து கொண்டது  உட்பட பல சம்பவங்கள், அமைச்சரை கோபத்தில் ஆழ்த்தி இருப்பதாலும், ஒரு வித முடிவோடு சென்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியிடம் கெஞ்சாத குறையாக முறையிட்டிருக்கிறார்.

              

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி, “பாலாஜி, இப்ப எனக்கு பிரச்னையே நீங்கள்தான். “எடப்பாடியே என்றும் முதல்வர்” என்று நானா உங்களை ட்வீட் போடச்சொன்னேன்?  நீங்களாக அப்படி போட்டவுடனே அண்ணாச்சி ஓ.பி.எஸ், ஏதோ நான் சொல்லித்தான் நீங்கள் ‘ட்வீட்’ போட்டதாக கருதிக்கொண்டு, என்னைத் தவறாக நினைத்து விட்டார்.  அதற்குப்பின் அது பெரும் பிரச்னையாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் உங்க வாய்தான். முதல்ல பேச்சைக் குறைங்க.  நானே இங்க ஏகப்பட்ட பிரச்னைல இருக்கேன். இதுல நீங்க வேற பிரச்னையை உண்டாக்கலாமா? போங்க, போயி  வேலயப்பாருங்க!” என்று சற்று காட்டமாகவே பேசி அனுப்பி விட்டாராம்.

இதனால், தனக்கு உரிய பதில் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் மேலும் மனம் வெறுத்துப்போன ராஜேந்திர பாலாஜி, தனது உதவியாளர் பாபுராஜ் இல்லத்திருமணத்தில் கலந்து கொள்ள ராஜபாளையம் சென்று விட்டார். ஆனால், அதன்பிறகும் அவரது புலம்பல்கள் நின்ற பாடில்லையாம். இதற்கிடையே, தேர்தல் நெருங்கி வருவதால் அதிவிரைவில்  விருதுநகர் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து, புதிய மாவட்ட செயலாளர்களாக இருவரை அறிவிக்க ஆலோசனை நடத்தி வருகிறது அ.தி.மு.க. தலைமை. இந்நிலையில், சாத்தூர் ராஜவர்மன் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழனை அழைத்துக்கொண்டு போய், தலைமைக் கழகத்தில் அமைச்சருக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் பரவிக்கிடக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் யாரும் கட்சி வேலைகளைப்பார்ப்பதாகத்தெரியவில்லை என்று வேதனைப்படுகிறார்கள் கட்சியின் உண்மைத்தொண்டர்கள். இதனிடையே, கடந்த வாரம் வெள்ளியன்று சிவகாசி அருகேயுள்ள மூளிப்பட்டியில் தனது குலதெய்வக்கோயிலில், சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ள ராஜேந்திர பாலாஜி, ‘தானே மீண்டும் மாவட்ட செயலாளராக வருவேன்’என தன்னைச் சந்திப்பவர்களிடம் ‘ஸ்ட்ராங்காக’கூறி வருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெறுமனே அமைச்சர்கள் வேலுமணியையும், அவரது சொல்படி அமைச்சர் தங்கமணியையும் சந்தித்து முறையிட்டும் கூட, எடப்பாடி அவரை வேலையைப்பாருங்க என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி இழந்த தன் பதவியைப்பெற ‘மேலே இருக்கும்’பவர் சென்டர்களை நாடலாமா? என்றும் ஆலோசித்து வருகிறாராம். ‘சோர்ஸ்’தெரிந்து விட்டால் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்று என்ன வேண்டுமானாலும் செய்து, மாவட்ட செயலாளர் பதவியை அடைந்தே தீருவார்  என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், அதற்கும் முட்டுக் கட்டை போட சில தொடர்புகளை புதிதாக யாராவது ஏற்படுத்தித்தர மாட்டார்களா? என்று அவரது உட்கட்சி எதிரியான ராஜவர்மன் எதிர்பார்த்துள்ளார் என்றும் பேச்சிருக்கிறது. மேலும், ‘ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஏதாவது செய்தேயாக வேண்டும்’ என்ற நிலையில் இருக்கும் ராஜவர்மன்,  தனது சாத்தூர் தொகுதியில் எந்தக்கல்யாண வீடாக இருந்தாலும், காதுகுத்து வீடாக இருந்தாலும் அழைக்காமலே சென்று ஆஜராகி அள்ளி விடுகிறாராம்!

click me!