தமிழக மக்களே உஷார்..!! அடுத்த 24 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகுதாம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2020, 1:23 PM IST
Highlights

தென் தமிழக கடலோரப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 9-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலை 3.5 மீட்டர் முதல் 4.0 மீட்டர் வரை எழும்பக் கூடும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்திற்கு, 10-9-2020 வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாக கூடும், கடந்த 24 மணி நேரத்தில், வத்தளை அணை (திருச்சி) 14 சென்டி மீட்டர் மழையும், தேவலா (நீலகிரி) செய்யார் (திருவண்ணாமலை) சமயபுரம் (திருச்சி) கலவை (ராணிப்பேட்டை) தல 8 சென்டி மீட்டர் மழையும், முசிறி (திருச்சி) திருமங்கலம் (மதுரை) தல 6 சென்டி மீட்டர் மழையும், வேப்பந்தட்டை (பெரம்பலூர்) சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) மணல்மேடு (நாகப்பட்டினம்) பரமத்திவேலூர் (நாமக்கல்) தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 11 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 11 வரை குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 12,13 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 9-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலை 3.5 மீட்டர் முதல் 4.0 மீட்டர் வரை எழும்பக் கூடும், எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

click me!