டி.ஆர் பாலுவுக்கு ஏன் பொருளாளர் பதவி தெரியுமா..?? கருணாநிதிக்கு இந்த வேலையும் பார்த்தாரா..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2020, 12:49 PM IST
Highlights

திமுக பொருளாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு மறைந்த  திமுக தலைவர் கருணாநிதியின் கார் டிரைவராக பணியாற்றியவர் என திமுக  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொருளாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்  பாலு மறைந்த  திமுக தலைவர் கருணாநிதியின் கார் டிரைவராக பணியாற்றியவர் என திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர் பாலு உட்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைந்தனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலு ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இருவரும் பதவிகளுக்கு போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட துரைமுருகனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பொருளாளராக தேர்வான டி.ஆர். பாலுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறினார். இந்நிலையில் திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர் பாலு  திமுகவில் ஆற்றிய பணிகள் வகித்த பொறுப்புகள் குறித்து தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-  கழகப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டி.ஆர் பாலு அவர்கள் 1957இல் திராவிட முன்னேற்ற கழக  உறுப்பினராகி, பகுதி பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், என்று படிப்படியாய் பல்வேறு பொறுப்புகளை வகித்து, பம்பரம்போல் சுழன்று பணியாற்றி 1974இல் கழகத்தின் சென்னை மாவட்ட துணைச் செயலாளரானவர். 

மிசா நெருக்கடி காலத்தில் கலைஞரின் ஓட்டுனராகவே பணியாற்றியவர், மிசாவில் கைதாகி சிறை சென்றவர், 1983 முதல் 1992 வரை சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர், பாரம்பரியமிக்க கழக குடும்பத்தைச் சேர்ந்தவர், தென்சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1986 முதல் 1992 வரை கழக மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி பாராளுமன்ற மற்றும் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் கழகத்தின் கருத்துக்களை திறம்பட எடுத்து வைத்தவர். சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில், மத்திய அமைச்சராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். தமிழகத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவர பாடுபட்டவர். அவரது பெயர் கூறும் பூகோள அடையாளங்கள் நிரம்ப உண்டு. 

அதிமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது காணப் பொறுக்காமல், கொதிப்படைந்து, மத்திய அமைச்சர் என்றும் கருதாமல் துணிச்சலுடன் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டு மறைந்த முரசொலி மாறன் அவர்களுடன் கைதானவர். ஆவேசம் நிறைந்த போராட்ட குணத்திற்கு சொந்தக்காரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்ட தளபதியாக விளங்கியவர், கழகத் தலைவர் அவர்களின் தளபதியாக, முதன்மைச் செயலாளராக பணியாற்றி, தற்போது பாராளுமன்ற திமுக குழுவின் தலைவராக இருக்கும் அவர், கழக பொருளாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு கூறி பாராட்டுகளை தெரிவித்து அவரது அயராத கழகப் பணி இன்று போல் என்றும் இனிதே தொடர்ந்திட இந்தப் பொதுக்குழு இதயபூர்வமாக வாழ்த்தி மகிழ்கிறது. என  அந்த தீர்மானத்தில் டி.ஆர் பாலு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!