புதிய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்... கண்டுகொள்ளாத ரஜினி... கடுப்பில் ரசிகர்கள்!

By Selva KathirFirst Published Sep 9, 2020, 12:22 PM IST
Highlights

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் மாவட்டச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமித்த நிலையில் ரஜினியின் மக்கள் மன்றத்திற்கு தற்போது வரை நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.
 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் மாவட்டச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமித்த நிலையில் ரஜினியின் மக்கள் மன்றத்திற்கு தற்போது வரை நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. அதன் படி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையாக பிரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு என்று புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி உருவாக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டமும் புதியதாக உருவாகியுள்ளது. தமிழக அரசு நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது போல் அரசியல் கட்சிகளும் புதிய மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை உணர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் புதிய மாவட்டங்களுக்கு  தங்கள் நிர்வாகிகளை நியமித்துவிட்டன. அதே சமயம் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறும் ரஜினியின் மக்கள் மன்றத்திற்கு தற்போது வரை புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது முதலே அங்கு புதிய மாவட்டச்செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று அங்குள்ள நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மாவட்டங்கள் பிரித்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையிலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சிக்கு புதிதாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இந்தபுதிய மாவட்டங்களையும் ஒருங்கிணைந்த மாவட்டமாக பழைய நிர்வாகிகளே கவனித்து வருகின்றனர். மேலும் புதிய மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர், மாவட்ட தலைவர் போன்ற பதவிகளுக்கு பலர் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் தலைமையை அணுகி புதிய பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக பல முறை பேசியதாக சொல்கிறார்கள். ஆனாலும் தற்போது வரை புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமித்த பாடு இல்லை.

அண்மையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று சென்னையில் போயஸ் கார்டன் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வேலூர் மாவட்டம் சார்பில் இந்த போஸ்டர்கள் அடிக்கப்பட்டிருந்தன. அதிலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் என்று கூறியே ரஜினியை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்திருந்தார்கள். அங்கு திருப்பத்தூர், ராணிப்பேட்டைக்கு தனியாக மக்கள் மன்றம் இல்லை என்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக அப்பகுதியில் ரஜினி ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் பணிகளை தொடங்கும் போது இது சிக்கலை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். எனவே புதிய மாவட்டங்களுக்கு உடனடியாக மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று தலைமையிடம் கூறிவருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய ரஜினி புதிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனத்தில் பெரிய அளவில் அக்கறை காட்டாமல் இருக்கிறார். இதனால் அங்கு தங்களுக்கு பதவிகள் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள் கடுப்பில் இருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் ரஜினி இனியும் அரசியல் தொடர்பான முடிவெடுக்காமல் இருந்தால் மாவட்டங்கள் தோறும் போஸ்டர்கள் அடித்து தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் முடிவில் ரசிகர்கள் சிலர் உள்ளதாக கூறுகிறார்கள். அதற்கான முன்னோட்டம் தான் வேலூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் இப்போ இல்லைனா எப்போவும் இல்லை என்று ரஜினிக்கு புத்தி சொல்லி போஸ்டர்கள் அடிக்கப்பட்டது என்கிறார்கள்.

click me!