தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த ஓபிஎஸ்..! என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Mar 30, 2023, 1:26 PM IST
Highlights

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த 110 விதி அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்

வைக்கம் போராட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், வைக்கம் போராட்டம் தொடங்கி நூற்றாண்டு நாள் இன்று, இதற்கு காரணமாக இருந்த தந்தை பெரியாரை போற்றும் விதமாக விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு வெளியிடுவதில் என் வாழ்நாளில் கிடைத்த நல்வாய்ப்பாக கருதுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததும் முதன்முதலில் பெரியாரை சந்தித்து அண்ணாவும், கலைஞரும் வாழ்த்து பெற்றனர். தந்தை பெரியார் நடத்திய சமூக நீதி போராட்டங்கள் பற்பல, அவற்றில் வைக்கம் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

 கேரளா மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்பதற்கு எதிரானது தான் வைக்கம் போராட்டம். அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் பல நாள் தங்கி இருந்து வைக்கத்தில் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர். வைக்கம்  போராட்டம் நடைபெற்ற மார்ச் 30ம் தேதி தொடங்கி வைக்கம் நூற்றாண்டு விழா தமிழகத்தில் 1 வருடம் நடத்தப்படும். ஏப்ரல் 1ம் தேதி கேரளா அரசின் சார்பில் நடைபெறும் வைக்கம் போராட்ட நிகழ்வில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன். நவம்பர் 29ம் தேதி தமிழக-கேரள முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளும் விழா தமிழகத்தில் நடைபெறும். ஆண்டுதோறும் செப் 17ம் தேதி வைக்கம் விருது வழங்கபடும் என தெரிவித்தார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலை ரூ.8 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.இதனையடுத்து வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிகழ்ச்சியை தேசிய விழாவாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ஓராண்டு காலம் நடைபெறும் என அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரலாற்று நிகழ்வான இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு வரலாற்று அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார். திராவிட தந்தை பெரியார் மொழி கடந்து மாநிலம் கடந்து சமூக நீதிக்காக வைக்கம் போராட்டம் நடத்தினார். இந்த வரலாற்று நிகழ்வை முதல்வர் குறிப்பிட்டு சொன்னார் நமது உணர்வுகளை வெளிப்படுத்தினார். திராவிட இயக்கத்தின் நீட்சியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் முக்கிய காரணமாக இருந்ததாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த சிறப்பான அறிவிப்பு வரலாற்றில் இடம்பெறும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

click me!