அதிமுகவில் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் அடுத்த மாநாடு நடத்துவது தொடர்பாக மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் வரும் சனிக்கிழமை அன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஒற்றுமையாக இருந்த ஓபிஎஸ்- இபிஎஸ்க்குள் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அன்றைய தினமே இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு தீர்மானங்களுக்கு உயர்நீதிமன்றம் அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் 28 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றார். தனது சட்ட போராட்டங்கள் தோல்வி அடைந்ததையடுத்து அடுத்த கட்ட திட்டத்திற்கு தயாரானார் ஓபிஎஸ்.
இபிஎஸ்க்கு எதிராக போர்கொடி
இதையடுத்து கட்சி தொண்டர்களிடம் தன் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி திருச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுக 50 வது ஆண்டு நிறைவு விழாவை உள்ளடக்கி முப்பெரும் விழா மாநாட்டை ஓபிஎஸ் நடத்தினார். அந்த மாநாட்டை தொடர்ந்து தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மாநாடு நடத்த இருப்பதாக சொல்லப்பட்டது. இடையில் கடந்த மே 8 ஆம் தேதி சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த ஓ.பி.எஸ் , அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அதிமுகவை மீட்க இருவரும் இணைந்து செயல்படவுள்ளதாக ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் கூட்டாக அறிவித்தனர்.
ஒன்றினைந்த ஓபிஎஸ்-டிடிவி
தொடர்ந்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமணத்தையும் ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் இணைந்து நடத்தி வைத்தனர். இந்நிலையில் அடுத்த மாநாடு நடத்துவது தொடர்பாக மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் வரும் சனிக்கிழமை 24 ஆம் தேதி சென்னையில் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தவுள்ளார். பெரும்பாலும் கோவை அல்லது சேலம் மாவட்டத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இடமும் தேதியும் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இபிஎஸ் கோட்டையில் கெத்து காட்ட திட்டம்.?
தென்மாவட்டங்களிலும் தங்களுக்கு பலம் உள்ளது என காண்பிக்கும் வகையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வரும் நிலையில், மேற்கு மாவட்டத்தில் தங்களுடைய பலத்தை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வமும் மாநாடு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பி.எஸ் தனித்து மாநாடு நடத்துவாரா? அல்லது டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை இணைத்து நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்
டெல்லி செல்லும் ஆளுநர் ரவி..? விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ்- பரபரப்பை கிளப்பும் ஜெயக்குமார்