ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ள ஜேசிடி பிரபாகர், இந்தத் துரோகக் கூட்டம் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லையென விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசியாக ஓபிஎஸ் அணி நிர்வாகி ஜேசிடி பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள்ளும் சரி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வெளியேயும் சரி, தி.மு.க. செய்த தவறுகளை, தி.மு.க. தமிழ்நாட்டிற்கு இழைத்த துரோகங்களை, புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். உண்மையான புள்ளிவிவரங்களை அளித்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள். தவறான புள்ளி விவரங்களை அளித்தவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.
undefined
இந்த உண்மைக் கூட தெரியாமல், அறியாமையின் காரணமாகவோ அல்லது கலைஞர் கருணாநிதியின் புகழ் பாட வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாகவோ தன் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரை அழைத்து “விவாதங்களை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிதான் நமக்கு முன்னோடி அவர் ஒரு ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும் என்றால், அனைத்து விபரங்களையும் கையில் வைத்தபடி பேசுவார். அதுபோல நீங்களும் எல்லாவிதமான புள்ளி விபரங்களுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்" என்று திரு. எடப்பாடி பழனிசாமி பேசியதாக நேற்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதன்மூலம் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தி.மு.க.வின் ஊழகுழலாக செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
கச்சத்தீவு பிரச்சளையானாலும் சரி, காவேரி நதிநீர்ப் பிரச்சனையானாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சனையானாலும் சரி, மாநில சுயாட்சி குறித்த பிரச்சனையானாலும் சரி. தி.மு.க.வின் குடும்ப ஆட்சியால் மக்கள்படும் அல்லல்களானாலும் சரி, அவற்றை மக்கள்முன் புள்ளி விவரங்களோடு எடுத்துவைக்கும் துணிச்சல் பெற்ற ஒரே தலைவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புள்ளி விவர முன்னோடி என்றால் அது புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கர்நாடக அரசு பல அணைகளை கட்டியபோது தி.மு.க. வேடிக்கைப் பார்த்ததை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புள்ளி விவரங்களுடன் விளக்கியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மொத்தத்தில் புள்ளி விவரங்களின் முன்னோடிபுரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான்.
எது எப்படியோ, "உண்ட வீட்டுக்கு ரெண்டகம்” நினைக்கும் திரு எடப்பாடி பழனிசாமியின் துரோகச் செயல் தொடர்கிறது. தனது செயல்பாட்டின் மூலம் மாண்புமிகு அம்மா அவர்களை சிறுமைப்படுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வெட்கக்கேடானது. இந்தத் துரோகக் கூட்டம் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லையென ஜேசிடி பிரபாகரன் விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்