
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுக மூன்றாக பிளவுபட்டு, சசிகலா அணி, பன்னீர் அணி, தீபா பேரவை என தனித்தனியாக களத்தில் குதித்துள்ளன.
மூன்று தரப்பினருக்குமே, வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர், தொகுதிக்குள் வலம் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில்தான் தங்கி உள்ளனர்.
ஜெயலலிதா இறக்கும் வரை அனைவரும் ஒரே குழுவாக இருந்தவர்கள் தானே. அதனால், தொகுதிக்குள் ஒருவரை ஒருவர் மாறி, மாறி விமர்சித்துக் கொண்டாலும், விடுதியில் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சிரிக்கவும், பேசுவதும் தயங்குவதில்லை.
விடுதிகளில் உள்ள சில அறைகளில், மூன்று தரப்பை சேர்ந்தவருமே ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதும், கதை பேசுவதுமாகவே இருந்து வருகின்றனர்.
அப்போது சிலர், அங்கே இருந்து என்ன செய்யப்போகிறீர்கள், பேசாமல் இங்கு வந்து விடுங்கள், எல்லாவற்றையும் அண்ணனிடம் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்களாம்.
அவர்கள் இரு தரப்பையும் அண்ணன் என்றுதான் பேசிக்கொள்கிறார்கள். எந்த அண்ணன் என்பது, அந்தந்த அணிகளை சேர்ந்தவர்களுக்குதான் தெரியும்.
இதை எல்லாம் பார்க்கும்போது, தேர்தல் முடிந்து யார், யார் எந்தெந்த பக்கம் தாவுவார்கள் என்றே குழப்பமாக இருக்கிறது என்கின்றனர் சிலர்.
அட போங்கப்பா, நாம் எல்லோரும் ஒற்றுமையாக தானே இருக்கிறோம், அதுபோல, அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டால் நன்றாக இருக்குமே என்று சொல்லி பெருமூச்சு விட்டாராம் ஒரு சீனியர்.
தொகுதியில் எதிரி-விடுதியில் நண்பன் என்பது... அரசியலில் சகஜமப்பா!