
எப்போது இரட்டை மின்விளக்கு சின்னம் நமக்கு கிடைத்ததோ அப்போதே வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்த ஓபிஎஸ் ஜெயலலிதாவின் ஆன்மா இயற்கையாக நமக்கு கொடுத்ததுதான் இந்த சின்னம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சார்பில் போட்டியிடும் இ.மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட செரியன் நகர் பகுதியில் மதுசூதனனை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கிய ஓபிஎஸ்
கன்னியகா பரமேஸ்வரி கோவிலில் சாமி கும்பிட்டார். இதனைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்று பிரச்சாரம் செய்த அவர்,
கடுமையான உழைப்பால் உருவான ஆட்சியும், மாபெரும் இயக்கமும் அவருடைய மரணத்துக்கு பின்னால் எந்த குடும்பத்தின் கீழ் போகக்கூடாது என்று நினைத்தாரோ அவர்களுடைய கையில் சிக்கி இருக்கும் துர்பாக்கிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
அந்த துரோக செயலை தடுத்துநிறுத்தி மக்கள் இயக்கமாக தொடர நாங்கள் தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறோம் என்றும் தர்மயுத்தம் தொடங்கிய பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
நமக்கு கிடைத்து இருக்கும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் இயற்கையாக ஜெயலலிதா ஆன்மா கொடுத்த கொடை. அந்த சின்னம் நமக்கு எப்போது ஒதுக்கப்பட்டதோ அப்போதே நம்முடைய வெற்றி உறுதியாகிவிட்டது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.