
அதிமுகவில் உள்ள 1 கோடியே 53 லட்சம் தொண்டர்களில் 1 கோடியே 20 பேர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளதால் ஓபிஎஸ் தரப்பு தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என, அறிவிக்கக் கோரி, ஓபிஎஸ் அணியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர்.
மேலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் அணியினர் வேண்டுகோள் வைத்திருந்தனர்.
இது தொடர்பாக சசிகலா தரப்பினர் ஏற்கனவே தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில்,தேர்தல் கமிஷன் நாளை மறுநாள், முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் வீட்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாவட்ட வாரியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் பெருமளவு ஆதரித்து வருகின்றனர்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி, தமிழகத்தில் 31 இடங்களில், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றபோது லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின்போது கலந்து கொண்ட தொண்டர்களின்
கையெழுத்துடன் கூடிய முழு விபரங்களையும், வீடியோ ஆதாரங்களையும், ஓபிஎஸ் அணியின், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், பதிவு செய்துள்ளனர்.
இதில் அதிமுகவில் உள்ள 1 கோடியே 53 லட்சம் பேரில், 1 கோடியே 20 லட்சம் தொண்டர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விபரங்களை ஓபிஎஸ் அணியினர் நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உள்ளனர். இது சசிகலா தரப்புக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.