
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதலமைச்சராக முயன்றார். இதனால் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்க்கும், சசிகலாவுக்கும் இடையே அதிகாரப் போர் மூண்டது.
இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சசிகலாவுன் ஆதரவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆளுரின் உத்தரவுப்படி தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முன்னதாக சசிகலா தரப்பினர் 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து அவர்களை நன்கு கவனித்ததாக கூறப்படுகிறது. அப்போது குதிரை பேரம் நடப்பதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டின.
ஓபிஎஸ் தரப்பு, கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் தங்களைத்தான் ஆதரிப்பதாக சொல்லி வந்தனர். இந்நிலையில் கூவத்தூரில் உள்ள எம்எல்ஏ ஒருவரிடம் ஓபிஎஸ்ன் மகன் ஓபி.ரவீந்திரநாத் பேரம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதில் ஓபிஎஸ்ன் மகன், அண்ணே நீங்க அப்பாவை ஆதரிக்கனும்..இப்போ மக்களோட விருப்பம் என்னன்னு உங்களுக்கு தெரியும்…தொகுதி பக்கம் போய் மக்களை சந்திச்சா அவர்களே சொல்லுவார்கள்…
நீங்க அப்பாவை கண்டிப்பா ஆதரிக்கனும்..போன்ல பேசக்கூடாது..இருந்தாலும் பேசுரேன்…உங்களுக்கு என்ன செய்யனுமோ அதை ..உங்களுக்கு நல்லாவே தெரியும்,,நல்ல காரியத்துக்காக அப்பாவை ஆதரிக்கனும் என ஓபிஎஸ் ரவீந்திரநாத் பேசினார்.
அவருக்கு பதிலளித்த எம்எல்ஏ.. போன்ல வேண்டாம்… நாம நேர்ல பேசலாம் என பதிலளிக்கிறார்.
அப்போது ஓபிஎஸ் மகன் சரினே நேர்ல பேசலாம் எனக்கூறிக் கூறி போனை வைத்து விடுகிறார். ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.