
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத் தேர்தல் முடிந்தவுடன் தற்போது சசிகலா தரப்பில் இருக்கும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள், அப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவில் படிப்படியாக தான் உயர்வு பெற்றதாகவும், அதற்கு முழு காரணம் ஜெயலலிதாதான் எனவும் தெரிவித்தார்.
தன்னை டி.டி.வி.தினகரன்தான் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார் என கூறப்படுவது முற்றிலும் பொய் என தெரிவித்த ஓபிஎஸ், தற்போது தினகரன் அதிகார போதையில் பேசி வருவதாக குறிப்பிட்டார்.
ஜெயலலிதா தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாக தெரிவித்த ஓபிஎஸ்,என் மீது நம்பிக்கை இருந்ததால்தான் தொடர்ந்து என்னை இரண்டு முறை முதலமைச்சராக்கினார் என்றும் கூறினார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிகார நிர்பந்தம் இருக்கும் என்பதால்தான் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தாக தெரிவித்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, சசிகலாவுடன் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்டதாகவும் அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக சசிகலாவுடன் பேசுவதில்லை எனவும் ஓபிஎஸ் கூறினார்.
சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏக்கள் தற்போதும் தன்னுடன் பேசி வருவதாகவும், அவர்களும் நிர்பந்தம் காரணமாகவே அந்த அந்த அணியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிந்தவுடன் சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என கூறிய ஓபிஎஸ் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என குறிப்பிட்டார்.