
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நெல்லையில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணியென அதிமுக இரண்டாக பிளவு பட்டது.
சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. அ.தி.மு.க.வில் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 122 பேர் சசிகலாவை ஆதரித்ததால் அந்த அணியின் கை ஓங்கியது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் முதல்-அமைச்சர் ஆக முடியாமல் சிறை சென்றார்.
இதனால் சசிகலா தன் அக்காள் மகன் டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளர் ஆக்கினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது. அதில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டியிட்டதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே 7 பேர் கொண்ட வழி காட்டும் குழு அமைப்பது பற்றியும் இரு அணியினரும் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இரு அணிகளின் இணைப்பு... அடுத்தகட்டத்தை எட்டவில்லை.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவுக்குள் அணி என்பதே கிடையாது; அதேபோல் பிளவு என்பதும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுபோல் அதிமுக தலைவர்கள் பேசி வரும் இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மாவட்ட பொறுப்பாளர்களை பெயரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நெல்லையில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் நெல்லை வந்துள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில், அணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஓ.பி.எஸ். கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஓ.பி.எஸ்.-ன் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிளவுபட்ட அதிமுக அணிகளின் இணைப்புக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.