கொங்கு மண்டலத்தில் விரைவில் ஓ.பன்னீர் செல்வம் அணி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளநிலையில், நேற்று நடைபெற்ற மாநாட்டு செலவுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே ஒன்றரை கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் மாநாடு
கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது . கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அதிமுக வரலாற்றில் கோவை தான் பலமுறை அதிமுகவுக்கு திருப்புமுனை தந்துள்ளது எனவே கோயம்புத்தூரில் மாநாடு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சில மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர் .
கொங்கு மண்டலத்தில் எந்த இடத்தில் மாநாடு நடத்தினாலும் திருச்சி மாநாடு காட்டிலும் மிகச் சிறப்பாக நடத்தி காட்டுவோம் என அனைத்து மாவட்ட செயலாளர்களும் உறுதியாக கூறினர். ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மாநாடு நடத்த பணம் ஒன்றும் பிரச்சனை இல்லை அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
மாநாட்டுக்கு நிதி கொடுத்த நிர்வாகிகள்
எங்களை பொறுத்தவரை ஓ.பி.எஸ் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அது ஒன்று தான் முக்கியம். கொங்கு மண்டலத்தில் எங்கு நடத்தினாலும் பிரம்மாண்டத்தை காட்டலாம் என தெரிவித்தனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போதே செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக மாநாடு செலவுக்கு 10 லட்சம் தருவதாக அம்மாவட்ட செயலாளர் அறிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் 10 லட்ச ரூபாய் வழங்குவதாக உறுதி கொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் திருமாறன் சார்பில் மாநாடு நடத்த 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார்.மகளிர் அணியின் உமையாள் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி கொடுக்கப்பட்டது.
ஒரே நாளில் ஒன்றரை கோடி நிதி வசூல்
திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் மாநாடு நடத்த 2 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து பல மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் பங்குக்கு நிதி அளிப்பதாக தொடர்ந்து அறிவித்தவண்ணம் இருந்தனர். அந்த வகையில் கொங்கு மண்டல மாநாட்டிற்கு சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே சுமார் ஒன்றரை கோடி நிதி ஒரே நாளில் திரட்டப்பட்டது. இதனிடையே திருச்சி மாநாட்டை விட மிகபெரிய அளவில் மாநாட்டை சேலம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
புதிய நிற பிரச்சார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி..! திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன.?