
ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் செயலிழப்பு ஆகிய காரணங்களால், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அதே சமயம், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளுக்கு நிகரான தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் அளவில் தற்போது யாருமே இல்லை.
காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கும் தமிழகத்தில் பெரிய செல்வாக்கோ, செல்வாக்குள்ள தலைவர்களோ இல்லை.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் நடக்கும் இடைதேர்தல் முடிவுகளை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது.
அதே சமயம், அடுத்து வரப்போகும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில், வலுவான ஒரு கூட்டணியை கட்டமைப்பதன் மூலமே வெற்றியை அடைய முடியும் என, திமுக, சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி ஆகிய மூன்று தரப்புமே நினைக்கிறது.
ஜெயலலிதா மரண விஷயத்தில், சசிகலா மீதான மக்களின் கோபத்திற்கு பயந்து, தினகரனே, சசிகலா பெயர், படம் ஆகிய அனைத்தையும் இருட்டடிப்பு செய்து வருகிறார்.
இந்நிலையில், மற்ற கட்சிகள், அந்த அணி உருவாக்கும் கூட்டணியில் பங்கேற்க பயந்து ஒதுங்குகின்றன. அது பன்னீர் தரப்புக்கு ஒரு சாதகமாக அமைந்து விட்டது.
இதையடுத்து, தேர்தலை சந்திக்கும் வகையில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை பன்னீர்செல்வம் ஏற்கனவே தொடங்கி விட்டார்.
அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் ஓ.பி.எஸ் பக்கம் அணி திரண்டுள்ளதால், மற்ற கட்சிகளும் அவர் உருவாக்கும் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன.
அதன் முதல் கட்டமாக, தாமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து, தம்மோடு இணைத்துக் கொண்டுள்ளார் ஓ.பி.எஸ்.
அடுத்து, தேமுதிக அல்லாத, மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம், சி.பி.ஐ, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன், ஓ.பி.எஸ் அணியில் உள்ளவர்கள் ஏற்கனவே பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.
பாமக வும், தனித்து நிற்கும் முடிவை கைவிடுவதில் உறுதியாக உள்ளது. எனினும், அதன் பாசம் திமுகவின் பக்கம் கொஞ்சம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக வை, எக்காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது என்று முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
இனி, அந்த தலைவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக சந்தித்து, கூட்டணியை வலுவாக கட்டமைப்பதே பன்னீர்செல்வத்தின் திட்டம்.
இதன்மூலம், உள்ளாட்சி தேர்தல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்களில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு, மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.