
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி. தினகரனுக்கு வாக்களித்தக் கூடாது என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர் நடிகர் ஆனந்தராஜ். தீவிர விசுவாசியான அவர் கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்காக கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் ஜெ.மரணமடைந்ததும், அவர் அதிமுகவில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல், சசிகலாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆன்ந்தராஜ், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அதிமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடக்கூடாது என்பதை வாக்காளர்கள் மனதில் கொள்ள வேண்டும் என தெரிவித்த ஆனந்தராஜ், தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் என கூறினார்.
ஒரு புதிய முதலமைச்சரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என தினகரன் நினைக்கிறார். ஆனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
வருமான வரித்துறை என்பது அதிகாரம் மிக்க ஒரு மையம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நேற்று அமைச்சர் ஒருவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது, அமைச்சரின் ஆதரவாளர்கள் நடந்து கொண்ட விதம் கேலிக் கூத்தாக இருந்தது எனவும் ஆனந்தராஜ் குற்றம்சாட்டினார்.