ஓபிஎஸ் கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார்.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..!

By vinoth kumarFirst Published Sep 29, 2022, 6:52 AM IST
Highlights

வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. 

எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு திமுக துணை போனதில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். இதில், கைத்தறி நூல் துறை அமைச்சர் காந்தி , அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன்;- ஆந்திரா மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டாமல் இருக்க தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதனால் அணை கட்ட முடியாது. அப்படி அணை கட்ட முயற்சித்தால் வழக்கை துரிதப்படுத்துவோம் என்றார். 

அதிமுக ஆட்சியில் அணைகள், மதகுகள் பராமரிக்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணகிரி அணையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. பரம்பிக்குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. தற்போது பழுதடைந்த மதகுகள், கதவுகள் சீரமைக்க அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக பயங்கரவாதத்திற்கு துணை போவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகிறார். அவர் விவரம் தெரியாத அமைச்சர். எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு திமுக துணை போனதில்லை. 

ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், 'பாவம்... அவர் கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம். வேறு யாராவது சொன்னால் சொல்லுங்கள்' என்றார்.

click me!