
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளுமே வேட்டியை மடித்துக் கொண்டு களத்தில் குதித்துள்ளது. "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும்வோம்ல" என்ற சினிமா பட பாணியில் ஓ.பி.எஸ். தனது வேட்பாளராக மதுசூதனனை முன்னிறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றே தீருவது என தீர்மானம் எடுத்துள்ள ஓ.பி.எஸ். அணி மொத்தம் உள்ள 7 வார்டுகளிலும் மூத்த நிர்வாகிகளை நியமித்து தேர்தலைச் சந்திக்க உள்ளது.
இந்த பரபர அரசியல் சூழலில் திடீரென ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு புறப்பட்ட ஓ.பி.எஸ். ஆண்டாள் அழகர் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது இரட்டை இலை தங்களுக்கே கிடைக்க வேண்டும், ஆர்.கே. நகரில் அமோக வெற்றி பெற வேண்டும் என்று ஓ.பி.எஸ். மனதார வேண்டியதாக கூறுகின்றனர் உடனிருந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓ.பி.எஸ். தனது சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். பல நாள் இடைவெளிக்குப் பிறகு ஆண்டிப்பட்டிக்கு வந்த ஓ.பி.எஸ்.ஸூக்கு அவரது ஆதரவாளர்கள் தடபுடலான வரவேற்பு அளித்தனர்.
மேல தாளச் சத்தம் சென்னைக்கே கேட்கும் அளவுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. மாலை தனது குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் அவர் அங்கு வழிபாடு முடித்து விட்டு இன்று மாலை அல்லது நாளை சென்னை திரும்புவார் என்கின்றனர் ஆண்டிப்பட்டி அதிமுகவினர்.