தனியார் DTH சேவைக்கு ஆதரவாக திமுக அரசு..? அரசு கேபிள் டிவி முடக்கமா..? - ஓபிஎஸ் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Nov 21, 2022, 1:33 PM IST
Highlights

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமே முடக்கப்பட்டு விடுமோ, தனியார் DTH-க்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதோ, இனிமேல் குறைந்த செலவில் அதிக சேனல்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிப்பதாக ஓ பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு

அரசு கேபிள் டிவி முடக்கப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முந்தைய தி.மு.க. ஆட்சியில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதும், பின்னர் அந்த நிறுவனத்தின் பணிகள் எதற்காக முடங்கப்பட்டது என்பதும், இதற்கெல்லாம் காரணம் சுயநலம்தான் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் அறிவார்கள்.

ஆனால், 2011 ஆம் ஆண்டு மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன், குறைந்த கட்டணத்தில் மக்கள் அதிக தொலைக்காட்சி சேனல்களை கண்டு களிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

பாஜகவிற்கு ஆதரவாக அதிமுகவை கரைக்கும் செயலில் எடப்பாடி பழனிசாமி..? திருமாவளவன் விமர்சனம்

சேனல்களை பார்க்கமுடியாத நிலை

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக தனியாரை நியமித்து ஆணை வெளியிட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகள் சரிவர இல்லை என்றும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து, அண்மையில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கேபிள் டி.வி. சேனல்களை பார்க்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களுக்கே பிரச்சனை என்னவென்று தெரியாத சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கைபேசிகளை அணைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனியார் நிறுவனம் மீது புகார்

இது குறித்து அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் சேவை திடீரென தடைபட்டதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்படும் என்றும், இதற்குக் காரணமான தனியார் நிறுவனத்தின்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தனியார் நிறுவனத்திற்கான கட்டணத்தை ஓராண்டாக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனம் மென்பொருள் வழங்கும் சேவையை நிறுத்தியுள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. அதாவது, அரசு கேபிள் டி.வி. சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைதான்என்பதும், தனியார் நிறுவனம் அல்ல என்பதும் தெளிவாகிறது. 

உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி என்ன ஆனது..? மூன்றில் ஒரு பங்காக குறைத்தது ஏன்..! அன்புமணி ஆவேசம்

அரசு கேபிள் முடக்க திட்டமா.?

இதில் எது உண்மை என்பதை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமே முடக்கப்பட்டு விடுமோ, தனியார் DTH-க்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதோ, இனிமேல் குறைந்த செலவில் அதிக சேனல்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏழை, எளிய மக்களிடையே நிலவுகிறது. எது எப்படியோ, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகளை முடக்கியுள்ள தி.மு.க அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கைலாசா மன்னனாக நித்யானந்தா..! காசி தமிழ் சங்கமத்திற்கு அழைக்காதது ஏன் ..? முரசொலி கிண்டல்
 

click me!