அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான பொதுச்சேவை மின் கட்டணம் மீண்டும் உயர்வு.!விலைவாசி அதிகரிக்க வாய்ப்பு- ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jul 4, 2023, 8:55 AM IST

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கான 'பொதுச் சேவை' மின் கட்டணத்தையும், இதர மின் கட்டணங்களையும் மீண்டும் உயர்த்தியுள்ளதால் விலை வாசி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம்

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கான 'பொதுச் சேவை' மின் கட்டண உயர்வு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆண்டு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டபோது, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இதர வீடுகளில் பொதுச் சேவை பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை 1 யூனிட்டுக்கு 8 ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்ததோடு, மாதாந்திர நிரந்தரக் கட்டணமாக ஒரு கிலோ வாட்டிற்கு 100 ரூபாய் தி.மு.க. அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது, ஏற்கெனவே காலம் காலமாக வழங்கப்பட்டு வந்த மானியம் பறிக்கப்பட்டு, வணிக நிறுவனங்களுக்கு இணையாக மின் கட்டணத்தை தி.மு.க. அரசு நிர்ணயம் செய்தது. 

Tap to resize

Latest Videos

ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம்

பொதுச் சேவை பயன்பாடு என்றாலும், அதுவும் வீடுகளுக்கான மின் கட்டணம்தான். அங்கே வணிக நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ இல்லை. இதனை நன்கு தெரிந்திருந்தும், எப்படியாவது மக்களிடமிருந்து பணத்தை பறிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இதுபோன்றதொரு கூடுதல் சுமையை சென்ற ஆண்டு வீட்டு நுகர்வோர்கள்மீது தி.மு.க. அரசு சுமத்தியது. இது குறித்து, நான் உள்பட பலர் திரும்பப் பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக, பொதுச் சேவை பயன்பாட்டிற்கு 150 ரூபாய் செலுத்திவந்த மக்கள் 900 ரூபாய், 1000 ரூபாய் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதாவது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. 

பொதுச்சேவை கட்டணம் அதிகரிப்பு

இந்தக் கூடுதல் சுமை வீடின்றி வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த மக்கள்மீது சுமத்தப்பட்டது. இந்த நிலையில், 01-07-2023 முதல் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதுபோல் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் பொதுச் சேவை பயன்பாட்டிற்கான ஒரு யூனிட் கட்டணம் 8 ரூபாயிலிருந்து 8 ரூபாய் 15 காசாகவும், ஒரு கிலோ வாட்டிற்கான நிரந்தரக் கட்டணம் 100 ரூபாயிலிருந்து ரூபாயாகவும் மீண்டும் 102 உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், மின் இணைப்பு பெறும்போது செலுத்தப்பட வேண்டிய பதிவுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடு, ஒருமுனை கட்டணம், மும்முனைக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம்,

வீட்டு வாடகை உயர வாய்ப்பு

வைப்புத் தொகை என அனைத்துக் கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளன. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை ஆண்டுக்காண்டு இந்தக் கட்டணங்கள் எல்லாம் உயர்ந்து கொண்டே செல்லும் என்பதை உறுதி செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. இதன் காரணமாக, பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கூடுதல் கட்டணத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள், குறிப்பாக வாடகைக்கு குடியிருப்போர் ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். வீடுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றாலும், 'பொதுச் சேவை’ கட்டண உயர்வு மூலம் வீட்டு நுகர்வோர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நுகர்வோர் கட்டணமே வசூலிக்க வேண்டும்

வீடுகளில் உபயோகிக்கப்படும் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதும், வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வீட்டு பொதுச் சேவை பயன்பாட்டிற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படக்கூடாது என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது.வீட்டு நுகர்வோர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு, வீட்டு நுகர்வோருக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணத்தை குடியிருப்புகளுக்கான பொதுச் சேவை பிரிவிற்கு வசூலிக்க உத்தரவிட வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

Power Shutdown in Chennai: அடேங்கப்பா! இன்று சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடை? எங்கெல்லாம் தெரியுமா?

click me!