டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்! பாரில் ரூ.160 பீர் 300க்கு விற்பனை! ஆளுங்கட்சியை அலறவிடும் OPS

By Ajmal Khan  |  First Published May 23, 2023, 9:05 AM IST

தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச் சாராய கலாச்சாரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து தமிழ்க் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை திமுக எடுத்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 


மதுபானம்- 10 ரூ கூடுதலாக வசூலிப்பு

டாஸ்மாக பார்களில் அதிக விலைக்கு மதுபனங்களை விற்று கொள்ளையடிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க.வில் நடக்கும் ஊழல் குறித்து  அமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து, தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்காத நிலையில், டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதும், இவ்வாறு கூடுதல் சுட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மாண்புமிகு அமைச்சர் தெரிவித்து இருப்பதைச் சுட்டிக்காட்டினால், இந்தப் பணம் அவர்களுக்குத்தான் செல்கிறது என்றும், அவர்கள்தான் ஒவ்வொரு கடையாக வந்து வாங்கிச் செல்கிறார்கள் என்று கடையில் உள்ள விற்பனையாளர் தெரிவிப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Tap to resize

Latest Videos

160 ரூபாய் பீர் 300 ரூபாய்

இரு ஒருபுறம் என்றால், மறுபுறம் பல்லடத்தில் உள்ள 'கொக்கரக்கோ' என்கிற பாருடன் கூடிய உணவகத்தில் 160 ரூபாய் பீர் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இது குறித்து தட்டிக் கேட்டால் அனைத்து மட்டத்திலும் பணம் கொடுப்பதாகத் தெரிவித்து மிரட்டுவதாகவும் பல்லடம் மாணவர் அணி தி.மு.க. அமைப்பாளரே தெரிவிக்கிறார்.இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் எத்தனை பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். இந்தக் கூடுதல் வருமானம் யாருக்கு செல்கிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு. ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மவுனம் சாதிக்கிறார். 'மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி' என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

மது குடித்த இரண்டு பேர் பலி

இந்த நிலையில், தஞ்சாவூர் வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை ஒட்டியிருக்கும் மது அருந்தும் மையத்தில் காலை 11-00 மணிக்கு மது அருந்திய திருவாளர்கள் குப்புசாமி மற்றும் குட்டி விவேக் ஆகியோர் மதுபான கடைக்கு எதிரிலேயே மயங்கி விழுந்ததையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் வேதனைப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், மது குடித்து இறந்தவர்களின் உடல்களை ஆய்வு செய்ததில் அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு விஷம் கலந்திருப்பதுதான். கள்ளச் சாராய கலாச்சாரத்தை, விஷச் சாராய விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றிருக்கிற நிலையில், அரசே சயனைடு கலந்து மதுவை விற்பனை செய்வது என்பது மக்களை அழித்தொழிக்கும் செயல். மொத்தத்தில், டாஸ்மாக்கில் மிகப் பெரிய குளறுபடி, மிகப் பெரிய ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

விபரீத ஆட்சி வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை

தமிழக மக்களை அழிப்பதற்குப் பெயர்தான் 'திராவிட மாடல்’ ஆட்சி போலும்! தமிழ்க் குடியை கெடுக்க வந்த தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டு கால நிமுக, ஆட்சியில் ஒரு குடும்பத்தின் வருவாய் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இது வழிப்பறிக் கொள்ளைக்கு சமம். நீதி தவறி ஆட்சி நடத்தும் மன்னன், மக்களையும், பொருளையும் ஒரு சேர இழப்பாள் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப விபரீத ஆட்சி வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

முதலமைச்சர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலகனும்.!அடுத்தடுத்து புது அஸ்திரங்களை ஏவும் இபிஎஸ்-அதிர்ச்சியில் திமுக

click me!