தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழ் மொழித் தேர்வில் 36000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
அரசியல் காரணங்களுக்காக நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் கல்வி வாய்ப்புகளைத் தடுப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பழங்குடியினருக்கான மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி திட்டத்தின் கீழ் பயின்ற 15 மாணவர்கள், மிகக் கடினமான தேர்வான தொழில் நுட்பக் கல்விக்கான ஆரம்பநிலை கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) வெற்றி பெற்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். போக்குவரத்து வசதிகள் சரிவர இல்லாத தொலைதூர மலை கிராமப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, இது மிகுந்த ஊக்கமளிக்கும் செய்தியாகும்.
இதையும் படிங்க;- டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜி! பதவி நீக்கம் செய்யுங்கள்! தஞ்சை பார் மரணத்திற்கு பதில் என்ன? கிருஷ்ணசாமி ஆவேசம்.!
பல ஆண்டு காலமாக போதிய வசதிகள் கிடைக்காமல் உயர் கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளித் திட்டம் ஒரு வரப் பிரசாதம் என்றால் அது மிகையாகாது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இந்தத் திட்டத்தின் மூலம் இன்னும் பலர் பயனடைய வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழ் மொழித் தேர்வில் 36000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. கல்வித் திட்டத்தின் தரமும் கற்பித்தல் தரமும் குறைந்திருப்பதையே இது காட்டுகிறது.
தமிழில் இத்தனை மாணவர்கள் தோல்வியடைவது எதிர்காலத்தில் மாணவர்கள், தமிழ் பாடத்தைத் தேர்வு செய்யாமல் புறக்கணிக்கும் நிலை ஏற்படும். தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும் அமல்படுத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறது இந்த திறனற்ற திமுக அரசு. தமிழகக் கல்வித் துறை பாடத் திட்டங்களின் தரத்தையும், கற்பித்தல் தரத்தையும் உயர்த்த வேண்டிய அதே நேரத்தில், நாடெங்கும் உள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டிய அவசியமும் தெளிவாகிறது.
இதையும் படிங்க;- அப்போ அம்மா குடீநீர் விற்பனை செய்யப்பட்டதற்கு போராடினீங்க.! இப்போ ஆவினில் நீங்களே விற்குறீங்க- சீறும் அண்ணாமலை
ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப் புற மாணவர்களுக்கு 75% இடங்கள் மற்றும் மாணவிகளுக்கு 33% இடங்கள் என, சமூக நீதியை நடைமுறைப்படுத்தியிருக்கும் நவோதயா பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பு வரை எந்த கல்விக் கட்டணமும் இன்றி செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காக நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் கல்வி வாய்ப்புகளைத் தடுப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, மாநில அரசின் கல்வித் தரத்தையும் கற்பித்தல் தரத்தையும் உயர்த்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கிராமப்புற மாணவர்களுக்கான வரப்பிரசாதமான நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.