அதிமுக உட்கட்சித் தேர்தல்..! ஓபிஎஸ், இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பின் பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Jul 28, 2021, 11:06 AM IST
Highlights

உட்கட்சித் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் என்கிற ரீதியில் அமித் ஷாவிடம் ஓபிஎஸ் எடுத்துரைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் இபிஎஸ் அமைதியாக இருந்ததாகவும், அவர் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த உடன் உட்கட்சித் தேர்தலை நடத்தலாம் என்கிற மனநிலையில் இருந்ததாக கூறுகிறார்கள். 

டெல்லியில் பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து திரும்பியுள்ளனர் அதிமுகவினர் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.

வழக்கமாக டெல்லி செல்லும் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் இதற்கு முன்பு வரை ஒரே நாளில் மோடி, அமித் ஷாவை சந்தித்து திரும்புவது தான் வழக்கம். ஆனால் இந்த முறை பிரதமர் மோடியை சந்திக்க உடனடியாக நேரம் கிடைத்த நிலையில், அமித் ஷாவை சந்திக்க காத்திருக்க நேரிட்டது. காலையில் மோடியை சந்தித்துவிட்டு மாலை அல்லது இரவே அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்பது தான் ஓபிஎஸ் – இபிஎஸ்சின் திட்டமாக இருந்தது. ஆனால் அமித் ஷா நேரம் கொடுக்காத காரணத்தினால் ஒரு நாள் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில் முழுக்க முழுக்க தமிழக அரசியல் விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி திமுக அரசு நடத்தி வரும் அரசியல் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம், திமுக அனுதாபிகளுக்கு தேடி வரும் பதவி, கூட்டணி கட்சியினருக்கு வாரியங்களில் திமுக அரசு கொடுத்து வரும் பதவிகள் உள்ளிட்ட விவரங்களையும் அமித் ஷாவிடம் இருவரும் எடுத்துரைத்துள்ளனர். அதோடு அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டு குறித்து அமித் ஷா கேட்டுள்ளார்.

அதற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாகவே எட்டு கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே அதிகாரிகளால் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக அரசின் முதல் முயற்சி பெரிய அளவில் தங்களுக்கு எதிராக பலன் அளிக்கவில்லை என்பதையும் ஆனால் திமுக தொடர்ந்து தங்களை குறி வைத்து செயல்படும் என்பதை பற்றியும் அமித் ஷாவிடம் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இவற்றை எல்லாம் விட மிக முக்கிய விஷயமாக அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் மற்றும் பொதுக்குழு குறித்து பேசப்பட்டுள்ளது.

விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கு உட்கட்சித் தேர்தலை நடத்த வரும் டிசம்பர் வரை மட்டுமே அவகாசம் உள்ளதை ஓபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தங்கள் கட்சியை பொறுத்தவரை சாதாரண கிராம கிளைச் செயலாளர் முதல் உயர்ந்த பொதுச் செயலாளர் வரை அனைவரையும் தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேண்டும் என்கிற விதி உள்ளதாகவும், அந்த வகையில் அதிமுகவிற்கு தேர்தல் நடத்துவது என்பது ஒரு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது போன்றதாகவும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். கொரோனா சூழலிலும் உள்ளாட்சித் தேர்தல் சூழலிலும் உட்கட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என்பதால் அதற்கு தங்களுக்கு உதவ வேண்டும் என்று அமித் ஷாவிடம் கேட்டுக் கொண்டதாக கூறுகிறார்கள்.

அதே சமயம் பொதுக்குழுவை நடத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் உட்கட்சித் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் என்கிற ரீதியில் அமித் ஷாவிடம் ஓபிஎஸ் எடுத்துரைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் இபிஎஸ் அமைதியாக இருந்ததாகவும், அவர் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த உடன் உட்கட்சித் தேர்தலை நடத்தலாம் என்கிற மனநிலையில் இருந்ததாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் கூறியது அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடர வேண்டும் என்று கூறியதோடு உட்கட்சித் தேர்தல் விஷயத்தை பிறகு பார்த்துக கொள்ளலாம் என்று நம்பிக்கை அளித்து ஓபிஎஸ்சைஅனுப்பி வைத்ததாக சொல்கிறார்கள்.

click me!