புகழேந்தியால் தலைவலி.. வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய ஓபிஎஸ், இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Aug 15, 2021, 1:09 PM IST
Highlights

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு  வழக்கு தொடர்ந்தார்.

பெங்களூரு புகழேந்தி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து  விலக்களிக்கவும் கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகயோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். 

சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து இருந்தார். இதனால், அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார்.  

இதனையடுத்துஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 24-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

click me!