
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தேர்வு செய்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு மத்திய அரசிடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை ஆறுகளை இணைப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எந்தவித பதிலும் தராமல் மௌனமாக இருந்தார். ஆனால், முடியாது என மறுக்கவில்லை. எனவே மௌனமே சம்மதாக எடுத்துக்கொண்டோம் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழகத்தின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் தமிழக அரசின் கோரிக்கைகளை கேட்ட மத்திய நிதியமைச்சர், அதற்கு பதில் கூட அளிக்கவில்லை. மௌனமே சம்மதம் என எடுத்துக்கொள்ளும் அளவில்தான் உள்ளது மத்திய-மாநில அரசுகளின் நல்லுறவு என அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.