ஓபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு உடைப்பு!! அதிமுகவில் சலசலப்பு

 
Published : Jan 18, 2018, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஓபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு உடைப்பு!! அதிமுகவில் சலசலப்பு

சுருக்கம்

ops name inscription broken in madurai

இரட்டை இலையை மீட்டெடுத்ததை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு மட்டும் உடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ்-ன் தலைமையில் தனி அணி செயல்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து ஓரங்கட்டிவிட்டு பன்னீர்செல்வம் அணியும் பழனிசாமி அணியும் இணைந்தது.

பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து தினகரன், சசிகலாவை கட்சியை விட்டு ஓரங்கட்டிவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு சென்று இரட்டை இலையையும் மீட்டெடுத்தனர். 

நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்தாலும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என மைத்ரேயன் எம்பி முகநூலில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ்-க்கு ஆட்சியில் போதிய அதிகாரம் வழங்கப்படுவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

இரு அணிகளும் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இணைந்தன. அவற்றில், முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, கட்சி ஓபிஎஸ்-க்கு, ஆட்சி இபிஎஸ்-க்கு என்பது. ஆட்சியில் முழு அதிகாரத்தையும் இபிஎஸ் சுவைத்து வருகிறார். ஆனால், கட்சியில் ஓபிஎஸ்-க்கு அவ்வளவு அதிகாரம் இல்லை என்றே கூறப்படுகிறது. கூட்டுத்தலைமையில் கட்சி இயங்கினாலும் ஒருங்கிணைப்பாளருக்கான எந்த அதிகாரமும் ஓபிஎஸ்-க்கான மரியாதையும் வழங்கப்படுவதில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

அதை உண்மையாக்கும் வகையில், மதுரையில் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்த முப்பெரும் விழாவில் ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை. இரட்டை இலையை பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. 100 அடி உயர கம்பத்தில் கட்சியின் கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஆனால் ஓபிஎஸ் கலந்துகொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த முப்பெரும் விழா நடந்த விஷயமே ஓபிஎஸ்க்கு தெரியாது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

அதன்பின்னர், பன்னீர்செல்வத்தின் பெயரும் கல்வெட்டில் இடம்பெற்றது. கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டிவிடக்கூடாது என்பதற்காகவே பன்னீர்செல்வத்தின் பெயரை கல்வெட்டில் பொறித்தார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர், வைக்கப்பட்ட பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்ற கல்வெட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டை மட்டும் உடைத்து போட்டுள்ளனர். ஆனால், பழனிசாமி பெயர் உள்ள கல்வெட்டு நன்றாக உள்ளது. இதன்மூலம் பழனிசாமியின் ஆதரவாளர்கள்தான் அந்த கல்வெட்டை உடைத்தார்களா? அல்லது பழனிசாமியின் ஆதரவாளர்கள் உடைத்தார்கள் என நினைக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் யாரும் உடைத்தார்களா? என்பது தெரியவில்லை. ஆனால், இருதரப்புக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பின் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்த வேலையில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் அதிமுகவினர் தெரிவித்துள்ளார். 

எது எப்படியோ.. இந்த சம்பவம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் உண்மை.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!