அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு ஆகியவை செல்லும் என்று தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கின் போது நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். என இரு தரப்பும் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய கூறி வழக்கு விசாரணை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு ஆகியவை செல்லும் என்று தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அனைத்தும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்;- கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட நடவடிக்கை அனைத்து விதிகளுக்கும் எதிரானது. கட்சியில் இருந்து நீக்காமல் இருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு இருப்பேன். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு வேட்பாளரை தேர்வு செய்ய எங்களை வாக்களிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. என்னை நீக்கியது தவவென்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும். இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட இயலும் என வாதிடப்பட்டது.
இதனையடுத்து, இபிஎஸ் தரப்பில் வாதிடுகையில்;- அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி, தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. கட்சியில் 95% பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர். நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் உள்ளது என வாதிட்டனர்.
அப்போது, வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து, இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள் கூறி வழக்கு விசாரணை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.