
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், கடந்த ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி குமரேஷ் பாபு முன்நிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 22-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்க்கும் வழக்குகளில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் தெரிகிறது. இதனை இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.